குரங்கணியில் அனுமதியின்றி டிரெக்கிங் வனத்துறையினரை தாக்கி இஸ்ரேல் நாட்டினர் ஓட்டம்

தினகரன்  தினகரன்
குரங்கணியில் அனுமதியின்றி டிரெக்கிங் வனத்துறையினரை தாக்கி இஸ்ரேல் நாட்டினர் ஓட்டம்

போடி: இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 6 பேர் கேரள மாநிலம், மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். பின்னர் அங்கிருந்து தேனி மாவட்டம், போடிமெட்டு அருகே டாப் ஸ்டேஷனிலிருந்து குரங்கணிக்கு டிரெக்கிங் செல்ல முடிவு செய்தனர். இதற்காக மூணாறை சேர்ந்த ரவி(46) என்ற கைடு மூலம், நேற்று மாலை டாப்ஸ்டேஷனிலிருந்து குரங்கணிக்கு வந்தனர். குரங்கணி வனப்பகுதியில் வனத்துறையினர் யாரும் கண்காணிப்பில் இல்லை.கடந்த மார்ச் மாதம் கோவை, சென்னையை சேர்ந்த 23 பேர் கொழுக்குமலை அருகே ஒத்த மரம் பகுதியில், டிரெக்கிங் சென்றபோது தீயில் கருகி உயிரிழந்தனர். இதனால் குரங்கணி பகுதியில் டிரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து குரங்கணி போலீசார் கைடு ரவி மற்றும் 6 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.போடி வனத்துறை அலுவலகத்தில் 6 பேரிடமும், வனத்துறை அதிகாரிகள் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்களை கேட்டனர். ஆனால், எதையும் காட்டாமல் விசாரணைக்கும் ஒத்துழைக்க மறுத்தனர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது திடீரென 6 பேரும் வனத்துறையினரை சரமாரியாக தாக்கிவிட்டு வெளியே ஓடி வந்து கேட்டில் ஏறி குதித்து தப்பினர். சினிமாவில் வருவது போல வனத்துறை அலுவலகத்தில் இருந்து ஏறி குதித்து வெளியே ஓடிய வெளிநாட்டினரை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினர் விரட்டி ஓடியும், அவர்களை பிடிக்க முடியவில்லை. இதனால் போடியில் பரபரப்பு ஏற்பட்டது. பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட முக்கிய இடங்களில் 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். தற்போது கைடு ரவியிடம் தீவிர விசாணை நடைபெற்று வருகிறது.

மூலக்கதை