அமெரிக்க உளவு அமைப்பு திடுக்கிடும் தகவல்: சவுதி இளவரசர் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் கசோகி கொலை

தினகரன்  தினகரன்
அமெரிக்க உளவு அமைப்பு திடுக்கிடும் தகவல்: சவுதி இளவரசர் உத்தரவின் பேரில் பத்திரிகையாளர் கசோகி கொலை

வாஷிங்டன்: சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவின் பேரில்தான் அமெரிக்க பத்திரிகையாளர் கசோகி கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவு அமைப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் வெளிவரும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் சவுதி அரேபியாவை சேர்ந்த செய்தியாளர் ஜமால் கசோகி பணியாற்றி வந்தார். இவர் அடிக்கடி சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சனம் செய்து கட்டுரைகள் எழுதி வந்தார். இந்த நிலையில், துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு தனது திருமணம் சம்பந்தமான ஆவணங்களை பெறுவதற்காக கடந்த அக்டோபர் 2ம் தேதி  அவர் சென்றார். பிறகு, அவர் மாயமானார். அவர் கொல்லப்பட்டது தெரிய வந்தது.ஆனால், கசோகி மரணம் குறித்து சவுதி அரேபிய அரசு முரண்பட்ட விளக்கங்களை அளித்து வந்தது. இறுதியில், தனது தூதரகத்துக்குள் கசோகி கொல்லப்பட்டதை சவுதி அரேபிய அரசு ஒப்புக்கொண்டது. இது தொடர்பாக அமெரிக்க உளவு அமைப்பு (சிஐஏ) விசாரணை மேற்கொண்டு வந்தது. சவுதி அரேபியாவில் இருந்து அரசு சார்பாக 15 பேர் அரசு விமானத்தில் இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதும், அங்கு கசோகிக்கு அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்த அவர்கள், துண்டுத் துண்டாக வெட்டிக்கொலை செய்துள்ளனர்.  இதற்கான ஆடியோ ஆதாரத்தை துருக்கி விசாரணை அமைப்பு கொடுத்ததன் அடிப்படையில் சிஐஏ இந்த முடிவுக்கு வந்துள்ளது. இது குறித்து சிஐஏ அதிகாரி ஒருவர் கூறுகையில், `சவுதி இளவரசரின் அனுமதியின்றியோ, அவருக்கு தெரியாமலோ இந்த கொலை சம்பவம் நடக்க வாய்ப்பில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.

மூலக்கதை