நேரு குடும்பத்தை சேராத தலைவர்கள் மோடி சவாலுக்கு காங்கிரஸ் பதிலடி: சிதம்பரம் பட்டியல்

தினகரன்  தினகரன்
நேரு குடும்பத்தை சேராத தலைவர்கள் மோடி சவாலுக்கு காங்கிரஸ் பதிலடி: சிதம்பரம் பட்டியல்

புதுடெல்லி: நேரு குடும்பத்தை தவிர வெளிநபர்களை காங்கிரஸ் கட்சியில் தலைவராக நியமிக்க முடியுமா? என சவால் விட்ட பிரதமர் மோடிக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் நேரு குடும்பத்துக்கு வெளியே காங்கிரஸ் தலைவர்களாக இருந்த பட்டியலை ப.சிதம்பரம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.சட்டீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘நேரு குடும்பத்தை தவிர வெளிநபரை தலைவராக காங்கிரஸ் கட்சியால் நியமிக்க முடியுமா? அப்படி நியமித்தால் அக்கட்சியில் ஜனநாயகத்தை நேரு ஏற்படுத்தியுள்ளார் என்பதை ஒப்புக் கொள்கிறேன்’’ என கூறியிருந்தார். இதற்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் அளித்துள்ள பதில் கூறியிருப்பதாவது:சுதந்திரத்துக்குப் பின் அம்பேத்கர், லால் பகதூர் சாஸ்திரி, காமராஜ் மற்றும் மன்மோகன் சிங் உட்பட பலரும் சுதந்திரத்துக்கு முன் ஏராளமானோரும் தலைவர்களாக இருந்துள்ளதை எண்ணி காங்கிரஸ் பெருமைபடுகிறது. 1947ம் ஆண்டிலிருந்து காங்கிரஸ் தலைவர்களாக ஆச்சார்ய கிருபாளனி, பட்டாபி சீதாராமய்யா, புருசோத்தம்தாஸ் டாண்டன், யு.என் தேபர், சஞ்சீவ ரெட்டி, சஞ்சீவய்யா, காமராஜ், நிஜலிங்கப்பா, சி.சுப்ரமணியன், ெஜகஜீவன்ராம், சங்கர் தயாள் சர்மா, டி.கே.பரூகா, பிரம்மானந்த ரெட்டி, பி.வி.நரசிம்மராவ், மற்றும் சீதாராம் கேசரி போன்றோர் இருந்துள்ளனர்.காங்கிரஸ் தலைவர்கள் தேர்வு பற்றி பேசுவதற்கு நீண்ட நேரம் செலவழித்த பிரதமருக்கு நன்றி. அதில் பாதி நேரத்தை பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்டி, ரபேல், சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கி பற்றி பேச அவர் செலவழிப்பாரா? விவசாயகள் தற்கொலை, மிகப்பெரிய அளவில் இருக்கும் வேலைவாய்ப்பின்மை, கூட்டு வன்முறை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தீவிரவாத தாக்குதல் அதிகரிப்பது பற்றி பிரதமர் மோடி பேசுவாரா? இவ்வாறு சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.கஜா புயல் பாதிப்பை மதிப்பிட மத்திய குழுவை அனுப்ப வேண்டும்மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு டிவிட்டரில் ப.சிதம்பரம் விடுத்துள்ள வேண்டுகோளில், ‘தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பை மதிப்பிட உள்துறை செயலாளர் மூலமாக 2 அதிகாரிங்கள் அடங்கிய குழு உடனடியாக அனுப்ப வேண்டும். வழக்கமாக மாநில அரசிடம் இருந்து வேண்டுகோள் பெறப்பட்ட பின்புதான், மத்தியக் குழுவை அனுப்பி வைக்கப்படும். இதற்கு 2-3 வாரங்களாகும். அதற்குள் நிவாரண பணி முடிந்துவிடும் என்பதால் உண்மையான சேதத்தை மத்திய குழுவால் மதிப்பிட முடியாது. அதனால் இந்த வழக்கத்தை மாற்றி, உள்துறை அமைச்சகம் உடனடியாக தமிழகத்துக்கு மத்திய குழுவை அனுப்ப வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

மூலக்கதை