ராஜஸ்தானில் காங்கிரஸ் 2வது பட்டியல் வெளியீடு முதல்வர் வசுந்தராவை எதிர்த்து ஜஷ்வந்த் சிங் மகன் போட்டி: 32 வேட்பாளர்கள் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
ராஜஸ்தானில் காங்கிரஸ் 2வது பட்டியல் வெளியீடு முதல்வர் வசுந்தராவை எதிர்த்து ஜஷ்வந்த் சிங் மகன் போட்டி: 32 வேட்பாளர்கள் அறிவிப்பு

புதுடெல்லி: ராஜஸ்தானில் காங்கிரஸ் தனது 2வது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது.  ராஜஸ்தானில் அடுத்த மாதம் 7ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 200 இடங்கள் உள்ளன. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 152 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியல் கடந்த 15ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், அந்த கட்சி சார்பில் நேற்று 2வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை காங்கிரசின் பொதுச்செயலாளரும் ராஜஸ்தான் மாநில பொறுப்பாளருமான முகுல் வாஷ்னிக் வெளியிட்டார். இதில், 32 வேட்பாளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் சமீபத்தில் காங்கிரசில் இணைந்த முன்னாள் பாஜ எம்எல்ஏ மன்வேந்திரா சிங் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவர் முன்னாள் பாஜ மூத்த தலைவர் ஜஷ்வந்த் சிங்கின் மகன் ஆவார்.  இவர் பாஜவை சேர்ந்த முதல்வர் வசுந்தரா ராஜேவை எதிர்த்து ஜல்ரப்தான் தொகுதியில் போட்டியிடுகிறார். இது தவிர. அசோக் கெலாட், சச்சின் பைலட், சிபி ஜோஷி உள்ளிட்ட தலைவர்களும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதேபோல், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் 3வது பட்டியலை காங்கிரஸ் நேற்று வெளியிட்டுள்ளது. வரும் 7ம் தேதி இங்கு தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ் தெலுங்கு தேசம் கட்சி, தெலங்கானா ஜன சமிதி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இங்கு மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 94 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட முடிவு செய்துள்ளது. மற்ற இடங்களை கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை