மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரிடம் இருந்து எடுத்து சட்டீஸ்கரில் விவசாய கடன் தள்ளுபடி தேர்தல் பிரசாரத்தில் ராகுல் உறுதி

தினகரன்  தினகரன்
மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரிடம் இருந்து எடுத்து சட்டீஸ்கரில் விவசாய கடன் தள்ளுபடி தேர்தல் பிரசாரத்தில் ராகுல் உறுதி

ராய்ப்பூர்: நாங்கள் ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அதற்கான பணத்தை மல்லையா, நீரவ் மோடி போன்றவர்களிடம் இருந்து எடுத்து தரப்படும் என ராகுல் தெரிவித்தார். சட்டீஸ்கரில் வரும் 20ம் தேதி 2ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி கோரியா மாவட்டத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:  கடந்த நான்கரை ஆண்டுகளில் பிரதமர் மோடி சில தொழிலதிபர்கள் பெற்ற ரூ.3.5 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். ஆனால் அவர் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது குறித்து ஒரு போதும் பேசுவதில்லை. இதேபோல் முதல்வர் ராமன் சிங்கும் விவசாயிகளின் போனஸ் பணத்தை பறித்துள்ளார். காங்கிரஸ் இந்த மாநிலத்தில் விரைவில் ஆட்சியமைக்கும். அப்போது ஒவ்வொரு விவசாயிகள் பெற்ற வங்கி கடனையும் ஆட்சியமைத்த 10 நாட்களில் தள்ளுபடி செய்வோம். இதற்கு தேவையான பணத்தை ரூ.10,000 கோடியுடன் தலைமறைவான மதுபான அதிபர் மல்லையா, ரூ.35,000 கோடி வங்கிக் கடனுடன் தப்பிய நீரவ் மோடி, அனில் அம்பானி போன்றவர்களிடம் இருந்து எடுத்து விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். ஊழல் குறித்து பேசும் பிரதமர் மோடி, சட்டீஸ்கர் முதல்வர் ராமன் சிங்கின் ஊழல் குறித்து பேச மறுப்பது ஏன்? ராமன் சிங் மற்றும் அவரது மனைவி ரூ.36,000 கோடிக்கு ஏழைகளுக்கு வழங்கும் ரேஷன் அரிசியில் ஊழல் செய்துள்ளனர். மாநிலத்தில் ரூ.5,000 கோடிக்கு சிட்பண்ட் மோசடி நடந்துள்ளது. ராமன் சிங் மகன் அபிஷேக் சிங் பெயர் பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட ஊழலில் வெளியாகியுள்ளது. ஆனால் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை முதல்வர் மறுத்து வருகிறார். காங்கிரஸ் ஒருபோதும் பொய்யான வாக்குறுதிகளை அளித்ததில்லை என்றார்.

மூலக்கதை