அமராவதி அணை நீர் மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்வு! ஜூலையிலிருந்து நீடிக்கும் ததும்பிய நிலை!

தினமலர்  தினமலர்
அமராவதி அணை நீர் மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்வு! ஜூலையிலிருந்து நீடிக்கும் ததும்பிய நிலை!

உடுமலை:கஜா புயல் காரணமாக, உடுமலை, அமராவதி அணை நீர்மட்டம், ஒரே நாளில் ஏழு அடி உயர்ந்தது. ஜூலை முதல்,ஒரு சில நாட்களை தவிர, ஐந்து மாதமாக ததும்பிய நிலையிலேயே அணை நீர்மட்டம் தொடர்வதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணை மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.இந்தாண்டு பருவ மழையால், ஜூலை, 16 மற்றும் ஆக.,3 மற்றும் அக்.,8 என, மூன்று முறை அணை நிரம்பியது.கடந்த ஜூலை முதல், மொத்தமுள்ள, 90 அடியில், 85.00 அடி நீர் மட்டம் என, பெரும்பாலும் அணை நீர் ததும்பிய நிலையில் இருந்தது. அக்., மற்றும் நவ.,ல் ஒரு சில நாட்கள் மட்டும் நீர்மட்டம் குறைந்தது.
பாசனத்திற்கு தொடர்ந்து நீர் திறக்கப்பட்டதால், நேற்றுமுன்தினம் காலை, அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 90அடியில், 77.56 ஆக குறைந்திருந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் கஜா புயல் காரணமாக, பெய்த கனமழையால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.அமராவதி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான, கேரளா மாநிலம் மூணாறு, மறையூர் பகுதிகளில் பெய்த கனமழையால், பாம்பாற்றில்வெள்ளப்பெருக்குஏற்பட்டு, துாவானம் அருவியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து, அணையை நோக்கி வந்தது.அதே போல், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பெய்த கன மழையால், தேனாற்றிலும், வால்பாறை மலைப்பகுதிகளில் பெய்த மழையால், சின்னாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பல ஆண்டுகளுக்குப்பிறகு, அணைக்கு மூன்று பகுதிகளிலிருந்தும், வந்த நீர் வரத்தால், ஒரே நாளில் ஏழு அடி நீர்மட்டம் உயர்ந்தது.நேற்று காலை, அணை நீர் மட்டம், 84.55 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு, 6,901 கன அடியாகவும் இருந்தது.
நேற்றுமுன்தினம் இரவு, அணைக்கு உள்வரத்து வினாடிக்கு, 18 ஆயிரம் கன அடியாக இருந்ததோடு, அணையும் வேகமாக நிரம்பி வந்ததால், ஆற்றின் கரையோரத்திலுள்ள, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, அதிகாரிகளால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.உபரிநீர் திறக்கப்படவில்லைநேற்று உபரி நீர் திறக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், நீர் வரத்து குறைந்ததால், நீர் திறக்கப்படவில்லை. நேற்று மதியம், அணை நீர் மட்டம், மேலும் ஒரு அடி உயர்ந்து, 85.20 அடியாகவும், நீர் வரத்து குறைந்து, வினாடிக்கு, 2 ஆயிரம் கன அடியாக இருந்தது.

மூலக்கதை