காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரம்: தமிழக, கர்நாடக அரசுகளுக்கு மேலும் 2 வாரம் உச்சநீதிமன்றம் அவகாசம்

தினகரன்  தினகரன்
காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரம்: தமிழக, கர்நாடக அரசுகளுக்கு மேலும் 2 வாரம் உச்சநீதிமன்றம் அவகாசம்

புதுடெல்லி: காவிரியில் கழிவுநீர் கலக்கும் விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைக்கு பதில் அளிக்க தமிழக, கர்நாடக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் மேலும் 2 வாரம் அவகாசம் வழங்கியுள்ளது. காவிரியில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘கர்நாடக மாநிலத்தின் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர், காவிரி, பெண்ணையாறு ஆகியவற்றில் கலந்து தமிழகத்தின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளுக்கு வருகிறது. இவற்றை தடுத்து நிறுத்த, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 7ம் தேதி, உச்சநீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்த போது, ‘காவிரியில் கழிவுநீர் கலப்பதை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து 6 மாதங்களில் ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டது. இதன்படி, இறுதி ஆய்வறிக்கை நடப்பாண்டு கடந்த ஜூலை 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.அதில், ‘காவிரியின் துணை ஆறுகளான தென்பெண்ணை, அர்க்காவதியில் கழிவுகளின் அளவு வரம்பை விட மீறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொழிற்சாலைக் கழிவுகளை ஒழுங்குமுறைப்படுத்தவும், கழிவுகளைச் சுத்திகரிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் விரிவான நடவடிக்கையைக் கர்நாடக அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது, இவ்விவகாரம் தொடர்பாக, ‘மத்திய அரசும், தமிழக, கர்நாடக அரசுகள் 8 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்’ என, உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மேற்கண்ட வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, எல். நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர்கள் ஜி.உமாபதியும், கர்நாடக அரசின் சார்பில் மோகன் கத்தார்கியும் ஆஜராகினர். அவர்கள், ‘இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான பதிலைத் தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் அமர்வு, ‘இந்த மனு மீதான விசாரணை, இரு வாரங்கள் கழித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதற்குள், தமிழகம், கர்நாடக அரசுகள் எழுத்துப்பூர்வ பதில்களை தாக்கல் செய்ய வேண்டும்’ என, உத்தரவிட்டனர்.

மூலக்கதை