நிர்பயா நிதியை பயன்படுத்தி பாலியல் வழக்குகளை விசாரிக்க 1,023 நீதிமன்றங்கள்: பெண்கள் குழந்தைகள் நல அமைச்சகம் அறிவிப்பு

தினகரன்  தினகரன்
நிர்பயா நிதியை பயன்படுத்தி பாலியல் வழக்குகளை விசாரிக்க 1,023 நீதிமன்றங்கள்: பெண்கள் குழந்தைகள் நல அமைச்சகம் அறிவிப்பு

புதுடெல்லி: ‘பாலியல் பலாத்கார வழக்குகளை விரைவில் முடிப்பதற்காக, நிர்பயா நிதியைக் கொண்டு 1,023 விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்’ என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2012ம் ஆண்டு நிர்பயா என்ற இளம்பெண், தலைநகர் டெல்லியில் காம கொடூரர்களால் சிதைக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நிர்பயா கொலைக்கு நீதி வேண்டும் என்று எழுந்த அறைகூவலை அடுத்து, பெண்களின் மானம் மற்றும் பாதுகாப்பை காப்பதற்காக கடந்த 2013ம் ஆண்டு அவரின் பெயரில் நிர்பயா நிதி என்ற நிதியை ஒதுக்கி மத்திய அரசு சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இந்நிலையில், ‘நீதிமன்றங்களில் தேங்கியிருக்கும், பாலியல் பலாத்கார வழக்குகளுக்கு விரைவில் நீதி கிடைக்கும் நோக்கில், நிர்பயா நிதியைக் கொண்டு 1,023 விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்’ என, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, ரூ. 765.25 கோடி செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் முதல்கட்டமாக 9 மாநிலங்களில் மொத்தம் 777 விரைவு நீதிமன்றங்கள் உருவாக்கப்படும் எனவும், இரண்டாம் கட்டமாக, 246 நீதிமன்றங்கள் உருவாக்கப்படும் எனவும் பெண்கள் மற்றும் குழந்தகைள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  மேலும், மாநில அளவில் தடயவியல் ஆய்வகங்களை மேம்படுத்துவதற்காகவும், அங்கு பயன்படுத்தும் கருவிகளை கொள்முதல் செய்வதற்காகவும், நிர்பயா நிதியிலிருந்து ரூ.107.19 கோடி செலவில் திட்டம் செயல்படுத்த, மத்திய அரசின் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மூலக்கதை