இந்து ஐக்கியவேதி பொது செயலாளர் கைது கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்து ஐக்கியவேதி பொது செயலாளர் கைது கண்டித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் புரட்டாசி மாத பூஜைகளின்போதும், சித்திரை ஆட்ட திருநாள் பூஜையின் போதும் வன்முறை வெடித்தது. இந்நிலையில் மண்டல கால பூஜைகளுக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் சபரிமலை செல்ல தொடங்கியுள்ளனர். வன்முறை அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

இந்நிலையில் இந்து ஐக்கிய வேதி பொது செயலாளர் சசிகலா நேற்று இரவு இருமுடி கட்டுடன் சபரிமலை வந்தார். இரவு 9. 30 மணியளவில் மரக்கூட்டம் பகுதியை அடைந்தார்.

ேபாலீசார் அவரை தடுத்து நிறுத்தி சன்னிதானம் செல்ல கூடாது என கூறினர். கடந்த புரட்டாசி மாத பூஜைகளின் போதும், சித்திரை ஆட்ட திருநாளின் போதும் நடந்த போராட்டங்களில் இவர் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

இதனால் இம்முறையும் இவரால் பிரச்னை ஏற்படும் என கருதி போலீசார் அவருக்கு அனுமதி மறுத்தனர்.

ஆனால் அவர் தான் இருமுடி கட்டுடன் தரிசனத்துக்கு வந்திருப்பதாகவும், சன்னிதானம் செல்லாமல்  திரும்ப மாட்டேன் என்றும் அவர் கூறினார். இதனால் போலீசார் அவரை மரக்கூட்டத்திலேயே தடுத்து நிறுத்தினர்.

திரும்பி செல்லாவிட்டால் கைது செய்வோம் என போலீசார் எச்சரி–்த்தனர். ஆனால் அவர் திரும்பி செல்ல மறுத்ததால் அதிகாலை 1. 30 மணியளவில் போலீசார் அவரை கைது செய்து ரான்னி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து அறிந்த இந்து அமைப்பினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கடையே சசிகலா கைது செய்யப்பட்டதை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கேரளாவில் முழு அடைப்பு போராட்டத்துக்கு இந்து ஐக்கிய வேதி அழைப்பு விடுத்தது.

இதற்கு பாஜவும் ஆதரவு தெரிவித்தது. இதன்படி இன்று காலை முதல் கேரளா முழுவதும் அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் ஓடவில்லை.

திருவனந்தபுரம், ெகால்லம், எர்ணாகுளம் பகுதிகளில் கடைகள் மற்றும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சபரிமலை செல்லும் பக்தர்களின் வாகனங்கள் மட்டும் வழக்கம்போல் ஓடுகின்றன.

தமிழ்நாடு உள்பட வெளிமாநிலங்களில் இருந்து ரயில்களில் வரும் பக்தர்கள் செங்கனூரில் இறங்கி தான் சபரிமலை செல்வார்கள். இதனால் செங்கனூர் - பம்பை இடையே அரசு பஸ்கள் வழக்கம்போல் ஓடுகின்றன.

பத்தனம்திட்டாவில் இருந்தும் சபரிமலைக்கு வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுபோல் சபரிமலை ஆச்சார பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரித்விபால், பாஜ தலைவர் சுதிர், இந்து ஐக்கிய வேதி தலைவர் பார்கவராம் ஆகியோரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டனர். பந்த் எதிரொலியாக, கேரளாவில் இருந்து தமிழ்நாடு, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பஸ்களும் மாநில எல்லையில் இருந்து திரும்பின. நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன.

கோவையில் இருந்து செல்லும் பஸ்கள் வாழையாரிலும், செங்கோட்டையில் இருந்து செல்லும் பஸ்கள் ஆரியங்காவு வரையும் சென்று திரும்புகின்றன. இந்நிலையில், இன்று காலை இயக்கப்பட்ட அரசு பஸ் பால்ராமபுரத்தில் வைத்து ஒரு கும்பலால் கல் வீசி தாக்கப்பட்டது.

டிஜிபியுடன் இன்று ஆலோசனை சபரிமலை பக்தர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க கோரி தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் இன்று திருவனந்தபுரத்தில் கேரள டிஜிபி லோக்நாத் பெக்ராவை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

.

மூலக்கதை