பாகிஸ்தான் அபார பந்துவீச்சு 153 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து

தினகரன்  தினகரன்
பாகிஸ்தான் அபார பந்துவீச்சு 153 ரன்னில் சுருண்டது நியூசிலாந்து

அபு தாபி: பாகிஸ்தான் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 153 ரன்னுக்கு சுருண்டது. ஷேக் சையது ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலிப் பேட் செய்ய முடிவு செய்தது. பாகிஸ்தான் வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிவகுத்தனர். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் போராடிய கேப்டன் கேன் வில்லியம்சன் அரை சதம் அடித்தார். அவர் அதிகபட்சமாக 63 ரன் (112 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். நிகோல்ஸ் 28, லாதம் 13, வேக்னர் 12, வாட்லிங் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் பெவிலியன் திரும்பினர்.நியூசிலாந்து அணி 66.3 ஓவரில் 153 ரன் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்சை இழந்தது. டிரென்ட் போல்ட் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் பந்துவீச்சில் யாசிர் ஷா 3, முகமது அப்பாஸ், ஹசன் அலி, ஹரிஸ் சோகைல் தலா 2, பிலால் ஆசிப் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 59 ரன் எடுத்துள்ளது (23 ஓவர்). இமாம் உல் ஹக் 6, முகமது ஹபீஸ் 20 ரன்னில் ஆட்டமிழந்தனர். அசார் அலி 10 ரன், ஹரிஸ் சோகைல் 22 ரன்னுடன் களத்தில் உள்ளனர். நியூசி. பந்துவீச்சில் கிராண்ட்ஹோம், டிரென்ட் போல்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இன்று 2வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை