மம்தா பானர்ஜி ஆவேசம் சிலைகளை நிறுவி வரும் பாஜ.வும் தேர்தலுக்கு பிறகு சிலையாகி விடும்

தினகரன்  தினகரன்
மம்தா பானர்ஜி ஆவேசம் சிலைகளை நிறுவி வரும் பாஜ.வும் தேர்தலுக்கு பிறகு சிலையாகி விடும்

கொல்கத்தா: ‘‘ நாட்டில் பெரிய சிலைகளை நிறுவி வரும் பாஜ.வும், அடுத்த மக்களவை தேர்தலுக்குப் பிறகு சிலையாக மாறிவிடும்’’ என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.. குஜராத் மாநிலத்தில்  ரூ.3,000 கோடி செலவில் சர்தாய் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டர் உயரத்தில் மத்திய அரசு சிலையை நிறுவியுள்ளது. இதேபோல், அயோத்தியில் மிக பிரமாண்ட ராமர் சிலை அமைக்கப்படும் என பாஜ.வை சேர்ந்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து, கொல்கத்தாவில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில்  பங்கேற்ற மம்தா பேசியதாவது: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாட்டின் முக்கிய அமைப்புக்களை அழித்து வருகின்றது. ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), சிபிஐ.யின் செயல்பாடுகளை மாற்றி அமைக்க முயற்சிக்கிறது. சிலைகளை நிறுவி வரும் பாஜ.வும், அடுத்த மக்களவை தேர்தலுக்கு பிறகு  சிலைபோல் மாறிவிடும். குடிமக்கள் தேசிய பதிவேட்டை புதுப்பிப்பதன் மூலம் மத பிரிவினையை உருவாக்குவதில் பாஜ ஆர்வம் காட்டி வருகிறது. பாஜ.விடம் இருந்து நாட்டை காப்பாற்றுவதில் திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும். வரும் ஜனவரியில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மிகப்பெரிய பேரணி நடைபெறும். இதில் பங்கேற்கும்படி பாஜ.வுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

மூலக்கதை