சந்திரபாபு நாயுடு அதிரடியால் பரபரப்பு: ஆந்திராவில் சிபிஐ நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதி ரத்து: அரசாணையை திரும்ப பெற்றது

தினகரன்  தினகரன்
சந்திரபாபு நாயுடு அதிரடியால் பரபரப்பு: ஆந்திராவில் சிபிஐ நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதி ரத்து: அரசாணையை திரும்ப பெற்றது

அமராவதி: ஆந்திராவில் உள்ள மத்திய அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிபிஐ.க்கு அளித்திருந்த பொதுவான ஒப்புதலை ஆந்திர அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது.   ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்ததால், தே.ஜ கூட்டணியிலிருந்து தெலுங்கு தேசம் கட்சி கடந்த மார்ச் மாதம் விலகியது. அதன்பின், மத்திய அரசு மீது பல குற்றச்சாட்டுகளை இக்கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கூறி வருகிறார். அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக சிபிஐ,யை மத்திய அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது என அவர் குற்றம்சாட்டி வருகிறார். தெலுங்கு தேசம் கட்சிக்கு நெருக்கமானவர்கள் சிலரின் நிறுவனங்கள் மீது வருமான வரித்துறை சமீபத்தில் சோதனை நடத்தியது. இதுவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவர் அளித்த பேட்டியில், ‘ஆந்திராவில் இனிமேல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தும் போது, ஆந்திர போலீஸ் பாதுகாப்பு அளிக்காது’ என அறிவித்தார்.  இந்நிலையில், ஆந்திராவில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக சிபிஐ.க்கு வழங்கியிருந்த பொது ஒப்புதலை வாபஸ் பெறுவதற்கான அரசாணையை ஆந்திர அரசு வாபஸ் பெற்றுள்ளது. இதற்கான உத்தரவை ஆந்திர உள்துறை செயலாளர் அனுராதா கடந்த 8ம் தேதி வெளியிட்டுள்ளார். அதில், ‘டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டத்தின் (1946) 6வது பிரிவின் கீழ் சிபிஐ.க்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை, ஆந்திராவில் செயல்படுத்துவதற்கான பொது ஒப்புதல் உத்தரவு (ஜிஓ எம்.எஸ்.109) வாபஸ் பெறப்படுகிறது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.  சிபிஐ அமைப்பும் டெல்லி சிறப்பு போலீஸ் அமைப்பு சட்டத்தின் கீழ் வருகிறது. இந்த உத்தரவு மூலம் ஆந்திராவில் உள்ள தனி நபர்கள், மத்திய அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை நடத்தவோ, நடவடிக்கை எடுக்கவோ ஆந்திர அரசு ஒத்துழைப்பு அளிக்காது. மத்திய அரசுக்கு எதிராக ஆந்திர அரசு எடுத்துள்ள இந்த திடீர் நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஊழலை மறைக்க சந்திரபாபு முயற்சி:சிபிஐ. நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதியை ஆந்திரா அரசு ரத்து செய்ததை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பலர் வரவேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ், ‘‘தனது ஊழல் வெளிப்பட்டுவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதற்காக, சிபிஐ நடவடிக்கை எடுப்பதற்கான அனுமதியை சந்திரபாபு நாயுடு அரசு ரத்து செய்துள்ளது. இந்த முடிவு அதிகார துஷ்பிரயோகம் என்பது தெளிவாக தெரிகிறது. பா.ஜ.வை எதிர்கொள்வதற்காக காங்கிரஸ் போன்ற கட்சிகளுடன் தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்துள்ளது. பதற்றத்தில் உள்ள நாயுடு தனது அரசை காப்பாற்ற முயற்சிக்கிறார்’’ என்றார்.

மூலக்கதை