மதுரையில் பாழான 500 கி.மீ., ரோடுகளின் நிலை கேள்விக்குறி! 52 கி.மீ., ரோடு சீரமைப்பிற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

தினமலர்  தினமலர்
மதுரையில் பாழான 500 கி.மீ., ரோடுகளின் நிலை கேள்விக்குறி! 52 கி.மீ., ரோடு சீரமைப்பிற்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு

மதுரை : மதுரை நகரில் 900 கி.மீ., துாரமுள்ள ரோடுகள் பாழ்பட்டுள்ள நிலையில், இந்தாண்டு ரோடு சீரமைப்பிற்கு 52.24 கி.மீ., துார ரோடுகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர் ரோடுகள் சீரமைப்பிற்கு அதிக நிதி ஒதுக்கீடு தேவை. ஆனால் யானை பசிக்கு சோளப்பொரியாக மிக குறைந்த அளவிற்கு மாநில அரசு சாலை மேம்பாட்டு திட்டத்தில் 25 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மாநகராட்சி பொது நிதியில் பணம் இல்லை. உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கிடைக்கும் நிதி இல்லை.

வளர்ச்சி திட்டங்களுக்கான தனி ஒதுக்கீடுகளும் இல்லை என மாநகராட்சி நிர்வாகம் கூறி வருகிறது.தற்போது மத்திய அரசின் ஸ்மாட் சிட்டி மற்றும் அம்ரூட் திட்டங்களை மட்டுமே நம்பி பணிகளை மேற்கொள்ளும் நிலையில் நிர்வாகம் உள்ளது. மக்களை பெரிதும் அவஸ்தைப்பட வைக்கும் பாழான ரோடுகளுக்கு தனி ஒதுக்கீடுகளை அரசிடம் கேட்டு பெற்றால் தான், ரோடுகளுக்கு விமோசனம் கிடைக்கும்.

பொறியியல் பிரிவின் மதிப்பீட்டின் படி நகரில் 900 கி.மீ., துாரத்திற்கு ரோடுகள் பாழ்பட்டுள்ளன. இதில் 500 கி.மீ., துாரத்திற்கு ரோடுகள் பேட்ச் ஒர்க் பார்க்க வேண்டிய நிலையும், 400 கி.மீ., துாரமுள்ள ரோடுகள் முழுமையாகவும் பாழ்பட்டுள்ளன. ஆனால் இந்தாண்டு 25.55 கோடி ரூபாயில் 5 கட்டடங்களாக ரோடு பணிகள் நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி 42.36 கி.மீ., துாரத்திற்கு மட்டுமே தார் ரோடும், தெருப்பகுதிகளில் 9.88 கி.மீ.,க்கு பேவர் பிளாக் ரோடுகளும் அமைக்கப்படும். இதற்கான டெண்டர்களும் முடிக்கப்பட்டு வேலைகள் துவங்கவுள்ளன. மழை காலத்திற்கு பின் ரோடு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் அவஸ்தைப்படுவதை தவிர வேறு வழியில்லை. அமைச்சர், எம்.பி., மற்றும் எம்.எல்.ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதிகளை ரோடு மேம்பாட்டிற்கு ஒதுக்க முன்வர வேண்டும்.

மூலக்கதை