தாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு

தினமலர்  தினமலர்
தாஜ் மஹாலில் பூஜை; ஹிந்து அமைப்பு அறிவிப்பு

ஆக்ரா, :'உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலில், முஸ்லிம்கள் தொழுகை நடத்தினால், நாங்களும் பூஜை நடத்துவோம்' என, ஹிந்து அமைப்பு அறிவித்துள்ளது.

உ.பி., மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில், வெள்ளிக் கிழமையை தவிர மற்ற நாட்களில் தொழுகை நடத்த, இந்திய தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் இளைஞர்கள் சிலர், சமீபத்தில், தாஜ் மஹால் வளாகத்தில் உள்ள மசூதியில் தொழுகை நடத்தினர்.

நேற்று முன் தினம், தாஜ் மஹாலின் கிழக்கு மற்றும் மேற்கு நுழைவாயிலில், தொல்லியல் துறை ஒட்டிய அரசு அறிவிப்பில், 'வெள்ளிக் கிழமை பிற்பகலில் மட்டும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுவர்' என, கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 'தாஜ் மஹால் வளாகத்தில், பூஜை, அபிஷேகம் செய்வதற்கு எங்களுக்கு அனுமதிக்க வேண்டும்' என, பஜ்ரங் தள் அமைப்பு அறிவித்துள்ளது.

இது குறித்து, அந்த அமைப்பின் தலைவர் கோவிந்த் பராசர் கூறியதாவது: தாஜ் மஹால் அமைந்துள்ள இடம், பழமையான சிவன் கோவிலுக்கு சொந்தமானது. எனவே, முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதி தந்தால், சிவனுக்கு பூஜை, அபிஷேகம் செய்ய, எங்களுக்கும் அனுமதி தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை