பிரதமர் மோடி சவால் நேரு குடும்பத்தை சேராதவரை காங்கிரஸ் தலைவராக்க தயாரா?

தினகரன்  தினகரன்
பிரதமர் மோடி சவால் நேரு குடும்பத்தை சேராதவரை காங்கிரஸ் தலைவராக்க தயாரா?

அம்பிகாபூர்: ‘‘நேரு குடும்பத்தை சேராத ஒருவரை கட்சி தலைவராக 5 ஆண்டுகள் நியமிக்க காங்கிரஸ் கட்சி தயாரா?’’ என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். சட்டீஸ்கர் மாநிலத்தில் 2ம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று அம்பிகாபூர் வந்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:காங்கிரஸ் கட்சிக்கு நான் சவால் விடுக்க விரும்புகிறேன். நேரு குடும்பத்தை சேராதா ஒரு நல்ல காங்கிரஸ் தலைவரை, கட்சியின் தலைவராக 5 ஆண்டுகளுக்கு நியமிக்க வேண்டும். அப்போதுதான் அந்த கட்சியில் ஜனநாயக முறையை ஜவகர்லால் நேரு உண்மையிலேயே உருவாக்கியுள்ளார் என நான் ஏற்றுக் கொள்வேன். கடந்த 4 தலைமுறைகளாக இந்த நாட்டை  காங்கிரஸ் ஆண்டுள்ளது. அவர்கள் நாட்டுக்கு என்ன நல்லது செய்தனர் என்பதை கூற வேண்டும். டெல்லி செங்கோட்டையில் பேச ஒரே குடும்பத்துக்கு மட்டுமே இருந்த உரிமையை மக்கள் தகர்த்தனர். உங்களால், சாதாரண மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடியாது. ஆனால், டீ விற்ற என்னால் புரிந்து கொள்ள முடியும். தங்களின் பொய்களால், காங்கிரசார் நாட்டை இருளில் வைத்திருந்தனர். அது மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. ஒரு ஏழைத் தாயின் மகன் பிரதமராக முடியும் என்பதை நேரு குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்ைல. பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. இந்த நடவடிக்கை மூலம் படுக்கைக்கு அடியில் மூட்டைகளில் பதுக்கப்பட்ட பணம் வெளியே வந்தது. இது இன்னும் அவர்களை கலங்க வைக்கிறது. இம்மாநிலத்தில் நடந்த முதல்கட்ட தேர்தலில் பஸ்தார் மக்கள், நக்சல்களுக்கு சரியான பதிலடி கொடுத்து, அதிகளவில் ஓட்டு போட்டுள்ளனர். இவ்வாறு மோடி பேசினார்.

மூலக்கதை