காங். தலைவர் ராகுல் ஆவேசம் ஊழலை பற்றி பிரதமர் மோடி இப்போது பேசுவதே இல்லை

தினகரன்  தினகரன்
காங். தலைவர் ராகுல் ஆவேசம் ஊழலை பற்றி பிரதமர் மோடி இப்போது பேசுவதே இல்லை

போபால் : மத்தியப் பிரதேசத்தில் வரும் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதற்காக, சாகர் மாவட்டத்தில் உள்ள தியோரி என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசியதாவது: நாட்டின் காவலாளியாக இருப்பேன் என்றும், ஊழலை ஒழிப்பேன் என்றும் பிரதமர் மோடி தற்போது கூறுவது இல்லை. அவர் அப்படி கூறினால், காவலாளி, திருடனாக மாறிவிட்டார் என மக்கள் பதிலடி கொடுப்பார்கள். பிரான்சிடம் இருந்து ரபேல் விமானத்தை தலா ரூ.526 கோடி என விலை நிர்ணயம் செய்து, 126 விமானங்களை வாங்க செய்யப்பட்ட ஒப்பந்தந்தை விமானப் படைக்கும், அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு கூட தெரிவிக்காமல் மோடி ரத்து செய்து விட்டார். அதன் பிறகு, 36 விமானங்களை மட்டும் பல மடங்கு கூடுதல் விலைக்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த ஒப்பந்தத்தில் அனில் அம்பானியை சேர்த்துக் கொள்ளும்படி மத்திய அரசு கூறியதாக அப்போதைய பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே கூறியுள்ளார். இதுதான் நாட்டின் காவலாளி செய்த வேலை. கரன்சி தடைக்குப் பிறகு மக்கள், தங்கள் பணத்தை எடுக்க வங்கிக்கு வெளியே வரிசையில் நின்றனர். ஆனால் நீரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி, விஜய் மல்லையா போன்றவர்கள் மக்கள் பணத்துடன் நாட்டை விட்டு தப்பிக்க மோடி அனுமதித்துள்ளார். உங்களையும் உங்கள் பணத்தையும் மோடி எப்படி கொள்ளையடித்து பணக்காரர்களிடம் கொடுத்தார் என்பதை காலம் நிருபிக்கும். ஆட்சிக்கு வருவதற்கு முன் ஊழலை ஒழிப்பது பற்றி பேசிய மோடி, இப்போது அது பற்றி பேசுவதே கிடையாது. நாட்டின் காவலாளியாக இருப்பேன் என மோடி கூறினார். ஆனால், அனில் அம்பானி போன்ற தொழிலதிபர்களுக்குதான் அவர் காவலாளியாக மாறினார். இவ்வாறு ராகுல் பேசினார்.

மூலக்கதை