ஒரு ரன்வே மூடப்பட்டதால் டெல்லி விமான கட்டணம் கடும் உயர்வு

தினகரன்  தினகரன்
ஒரு ரன்வே மூடப்பட்டதால் டெல்லி விமான கட்டணம் கடும் உயர்வு

புதுடெல்லி : டெல்லி ஏர்போர்ட்டில் பராமரிப்பு பணிக்காக ஓடு பாதை மூடப்பட்டுள்ளதால், விமான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மூன்று ஓடுபாதைகள் உள்ளன. இவற்றில்தான் விமானங்கள் புறப்படுவதும், இறங்குவதும் இருக்கும். இந்த மூன்றில் ஒன்றில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையடுத்து ரன்வே  13 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக அதை நிர்வகிக்கும் டிஐஏஎல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அந்த ஓடுபாதையில் விமானம் ஏறவோ, இறங்கவோ முடியாது. நாள் ஒன்றுக்கு 50 புறப்பாடு, 50 விமானம் தரையிறங்குவது குறையும். இது குறித்து விமான நிறுவனங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்லி விமான நிலையம் மிகவும் பரபரப்பானது.  நாள்தோறும் 1,300 விமானங்கள் வந்து செல்கின்றன. கடந்தாண்டு 6.35 கோடி பயணிகள் வந்து சென்றுள்ளனர். இப்போது ஒரு ஓடுபாதை மூடப்பட்டதை அடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இறங்குவதற்காக அனுமதி கோரி வானில் வட்டமடிப்பது, புறப்படுவதற்காக விமானத்தை தயார் நிலையில் வைத்திருப்பதால் எரிபொருள் செலவு அதிகமாகிறது. இதன் காரணமாக டெல்லிக்கு வரும் மற்றும் டெல்லியில் இருந்து பிற இடங்களுக்கு செல்லும் விமான பயணக் கட்டணங்கள் 86 சதவீதம் அதிகரித்துள்ளதாக இணையதளம் வாயிலாக விமான டிக்கெட்டுகளை விற்று வரும் முன்னணி நிறுவனம் கூறியுள்ளது.  வார விடுமுறை என்பதால் டிக்கெட்டுகளுக்கு கடும் கிராக்கி உள்ளது. இதுவும் உயர்வு காரணமாக கூறப்படுகிறது. வெள்ளிக் கிழமை மாலை, பல விமான நிறுவனங்களின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக கூறின். டெல்லி-பெங்களூரு விமானம்  11,044 யாக முன்பு இருந்தது. இன்றைய ( சனிக்கிழமை) கட்டணம்  13,702 ஆக உயர்ந்துள்ளது.  டெல்லியிருந்து மும்பை விமான கட்டணம் 9,228ல் இருந்து 11,060 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் இருந்து  பெங்களுரூ, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இதர நகரங்களுக்கு விமான கட்டணம் அடுத்த 1 வாரத்துக்கு குறிப்பாக நேற்று முதல் 19 நாட்களில் கூடுதலாகதான் இருக்கும்.

மூலக்கதை