அரசு குதிரையை அடித்து கொன்ற உத்தரகாண்ட் பாஜ எம்எல்ஏ பணம் கொடுத்து சிக்கினார் : சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ

தினகரன்  தினகரன்
அரசு குதிரையை அடித்து கொன்ற உத்தரகாண்ட் பாஜ எம்எல்ஏ பணம் கொடுத்து சிக்கினார் : சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ

டேராடூன் :  உத்தரகாண்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், சத் பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பணம் கொடுத்த சர்ச்சைக்குரிய பாஜ எம்எல்ஏ. வீடியோவில் சிக்கியுள்ளார். உத்தரகாண்ட் மாநிலத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இந்நிலையில் தனது தொகுதியான முசோரியில் நடந்த சத் பூஜையில் பாஜ எம்எல்ஏ கணேஷ் ஜோசி கலந்து கொண்டார். அப்போது அவர் பெண்களுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்களுக்கு அவர் தலா ₹100 வழங்கும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளபோது ஜோசி பணம் கொடுத்தது விதிமீறல் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இது தொடர்பாக எம்எல்ஏ ஜோசி கூறுகையில், ‘‘பெண்களுக்கு பணம் கொடுத்ததில் தவறு ஏதும் இல்லை. எனது நெற்றியில் திலகம் வைத்த வயதில் மூத்த பெண்களுக்கு மட்டும்தான் பணம் கொடுத்தேன். தங்களுக்கு திலகமிடும் சகோதரிகளுக்கு பரிசு அல்லது பணம் தருவது பழங்கால வழக்கம். அதை தான் பின்பற்றினேன். காங்கிரஸ் சிறிய விஷயத்தை மிகைப்படுத்தி காட்டுகிறது.  தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பினால் அதற்கு தகுந்த பதில் அளிப்பேன்” என்றார். அவர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. இது பற்றி விசாரணை நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையமும் அறிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பாஜ பேரணியின்போது காவல்துறை குதிரை சக்திமானை தாக்கி சர்ச்சைக்கு உள்ளானவர்தான் கணேஷ் ஜோசி. காயமடைந்த குதிரை சில நாட்கள் கழித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை