சபரிமலை தரிசனத்திற்காக வந்த திருப்திதேசாய் விமான நிலையத்தில் சிறை வைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சபரிமலை தரிசனத்திற்காக வந்த திருப்திதேசாய் விமான நிலையத்தில் சிறை வைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலையில் தரிசனத்துக்கு வந்த பெண்ணியவாதி திருப்திதேசாய் உள்பட 7 பெண்கள் கொச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியே வர முடியாத நிலையில் பக்தர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த மண்டல காலத்திலேயே சபரிமலைக்கு வருவேன் என்று பெண்ணியவாதியும், பூமாதா பிரகேட் என்ற அமைப்பின் தலைவருமான திருப்தி தேசாய் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 16ம் தேதி கேரளா வர இருப்பதாகவும், 17ம் தேதி சபரிமலையில் தரிசனம் செய்வதாக கூறி கடந்த சில தினங்களுக்கு முன் அவர் கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா, பிரதமர் மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

கேரள முதல்வர் மற்றும் டிஜிபிக்கு அனுப்பிய கடிதத்தில், எனக்கு போலீசார் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

ஓட்டலில் தங்கும் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். விமான நிலையத்தில் இருந்து ஹோட்டல் செல்ல கார் வசதி, சன்னிதானத்தில் ஐயப்பனை தரிசனம் செய்வதற்கான வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் கேரள அரசு தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் திருப்தி தேசாய்க்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்க முடியாது என்றும், மற்ற பக்தர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பையே அவருக்கும் வழங்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே சபரிமலை வரும் திருப்தி தேசாயை தரிசனம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என பாஜ மற்றும் இந்து அமைப்புகள் எச்சரித்திருந்தன.

இந்த பதற்றமான சூழ்நிலையில் இன்று அதிகாலை 4. 45 மணியளவில் திருப்தி தேசாய் தலைமையில் 7 இளம் பெண்கள் விமானம் மூலம் கொச்சி வந்தடைந்தனர்.

இது குறித்து அறிந்ததும் இன்று அதிகாலையில் பெண்கள் உள்பட ஏராளமானோர் விமான நிைலயம் முன்பு திரண்டனர். அவர்கள் திருப்தி தேசாய்க்கு எதிர்ப்பு தெரிவித்து விமான நிலைய வாசலில் அமர்ந்து நாம ஜெப போராட்டம் நடத்தினர்.

இதனால் திருப்தி தேசாயால் வெளியே வர முடியாத நிைல ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது.

இதற்கிடையே திருப்தி தேசாய் வாடகை காரில் செல்ல தீர்மானித்தார். ஆனால் அவரை அழைத்து செல்ல விமான நிலைய வாடகை கார் ஓட்டுநர்கள் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து ஆன்லைன் டாக்சி புக் செய்தார். இதன்படி ஒரு டாக்சி வந்தது.

ஆனால் அங்கு நிலவிய பதற்றமான சூழ்நிலையால் அந்த டாக்சியும் திரும்பி சென்றுவிட்டது. இதனால் பல மணி நேரமாக திருப்தி தேசாய் விமான நிலையத்திலேயே காத்து கிடந்தார்.

போலீசார் அவரிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். வெளியே பதற்றமான சூழல் நிலவுவதால் திரும்பி செல்ல கூறினர்.

அதை அவர் ஏற்காமல் விமான நிலையத்திலேயே இருந்து வருகிறார்.

.

மூலக்கதை