பீகாரில் 40 சிறுமிகள் பலாத்கார வழக்கில் தொடர்பு : மாஜி அமைச்சர் கட்சியில் இருந்து நீக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பீகாரில் 40 சிறுமிகள் பலாத்கார வழக்கில் தொடர்பு : மாஜி அமைச்சர் கட்சியில் இருந்து நீக்கம்

பாட்னா: பீகார் காப்பகத்தில் 40 சிறுமிகள் பலாத்கார வழக்கில் தொடர்புடைய முன்னாள் சமூகநலத்துறை அமைச்சர், அவரது கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம், முசாபர்பூர் பகுதியில் இயங்கி வரும் காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.

இது தொடர்பான விசாரணையில் 40க்கும் மேற்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சராக இருந்த மஞ்சு வர்மாவின் கணவர் அந்த காப்பகத்திற்கு அடிக்கடி சென்று வந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.



மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான பிரஜேஷ் தாகூருடன் அமைச்சரின் கணவர் சந்தேஷ்வர் வர்மா கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் 17 முறை பேசியுள்ளதாக செய்தி வெளியானது. இதனால் இதற்கு பொறுப்பேற்று அமைச்சர் மஞ்சு வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இது குறித்தான வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப்போது நீதிமன்றம், ‘முன்னாள் அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, பீகார் காவல் துறையின் செயல்படாத தன்மை எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது’ என்று கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் விசாரணையின் போது நீதிமன்றம், ‘முன்னாள் அமைச்சராக இருந்த ஒருவர் வெகு நாட்களாக தலைமறைவாக இருக்கிறார். ஒரு அமைச்சர் பதுங்கியுள்ளார்.

ஆனால், அதுகுறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. இந்தப் பிரச்னையின் வீரியம் விளங்குகிறதா?ஒரு மாதத்துக்கும் மேல் பீகார் காவல் துறையால் ஒரு முன்னாள் அமைச்சரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை எங்களால் நம்ப முடியவில்லை.

இதுகுறித்து விளக்கம் அளிக்க டிஜிபி நேரில் ஆஜராக வேண்டும்’ என்று உத்தரவிட்டது. மேலும், வருகிற 27ம் தேதியன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.   இந்நிலையில் மஞ்சு வர்மாவை, ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது.


.

மூலக்கதை