பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

தினகரன்  தினகரன்
பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு

சபரிமலை: மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. தற்போது திறக்கப்பட்டுள்ள ஐயப்பன் கோயில் நடை வரும் டிசம்பர் 27-ம் தேதி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 27-ம் தேதி சபரிமலை கோயிலில் மண்டல பூஜை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சபரிமலையில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் மண்டல பூஜைக்காக ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டுள்ளது. 41 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்டிருக்கும். இளம் பெண்களும் தரிசனத்திற்கு வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினரின் அனுமதியின்றி எந்த வாகனமும் சபரிமலைக்குள் நுழைய முடியாது. மண்டலபூஜை, மகரவிளக்கு பூஜைகளின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வருவார்கள். இந்த ஆண்டு பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் இளம்பெண்களும் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆன்லைனின் பதிவு செய்துள்ளனர். சபரிமலைக்கு வரும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், போராட்டக்காரர்களை சமாளிக்கவும் இந்த முறை சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சபரிமலைக்கு செல்லும் அனைத்து பாதைகளும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சபரிமலைக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் போலீசாரிடம் முன் அனுமதி பெற்றே சபரிமலை செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோயில் நடை திறக்கப்பட்ட பின், புதிய மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, மாளிகைபுரம் கோயில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி ஆகியோர் பதினொட்டாம் படி ஏறி பதவி ஏற்றுக்கொண்டனர். இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. கார்த்திகை 1-ம் தேதி அதாவது நாளைஅதிகாலை 4 மணிக்கு ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு ஐயப்பனுக்கு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. நாளையிலிருந்து 41 நாட்கள் வரை அதாவது மண்டல பூஜை வரை கோயில் நடை திறந்திருக்கும். டிசம்பர் 27-ம் தேதி மண்டல பூஜை விழா முடிந்த பின்பு, மீண்டும் கோயில் நடை சாத்தப்படும்.மூன்று நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 30-ம் தேதியன்று மகர விளக்கு பூஜைக்காகத் திறக்கப்படும் கோயில் நடை ஜனவரி 14-ம் தேதி வரை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் முடிவில் உறுதியாக இருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் சபரிமலை ஐயப்பனைத் தரிசிப்பதற்குப் பெண்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால், போராட்டக்காரர்களைச் சமாளிக்கப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக பத்தினம்திட்டா, நிலக்கல், எரிமேலி, பம்பை என அனைத்துப் பகுதிகளிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 10,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலை ஆச்சாரத்திற்கு எதிராக ஐயப்பன் கோவிலுக்கு வரும் பெண்களை தடுப்போம் என ஐயப்ப பக்தர்கள் அறிவித்துள்ளனர். இந்த தீர்ப்பு வெளியான பின்பு 2 முறை கோவில் நடை திறக்கப்பட்டபோது கோவிலுக்கு வந்த பெண்கள் தடுக்கப்பட்டனர். அப்போது போராட்டங்களும், தடியடியும் நடந்தது. இப்போது மீண்டும் நடை திறக்கப்பட்டுள்ளதால் பெண்கள் அதிகளவு வருவார்கள் என்று போலீசார் எதிர்பார்க்கிறார்கள். மண்டல பூஜை நாளில் ஐயப்பனை தரிசனம் செய்வோம் என சில பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் பிரம்மச்சாரியான ஐயப்பனை 10 வயதிற்கு மேல் 50 வயதிற்குட்பட்ட பெண்கள் தரிசனம் செய்ய விட மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். இத்தனை ஆண்டு காலமாக எந்த பிரச்சினையும் இன்றி மண்டல பூஜை நடைபெற்றுள்ளது. இம்முறை போராட்டம் எதுவுமின்றி ஐயப்பன் தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பான இருக்கிறது.

மூலக்கதை