இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா மீது ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் மிளகாய் பொடியை தூவி அட்டூழியம்

தினகரன்  தினகரன்
இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா மீது ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் மிளகாய் பொடியை தூவி அட்டூழியம்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரியா மீது ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் மிளகாய் பொடியை தூவி அட்டூழியத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கலாட்டா காரணமாக, ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்று நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவானது. இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை, அந்த பதவியை விட்டு நீக்கிய அதிபர் மைத்திரிபால சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை பிரதமராக்க நியமனம் செய்தார். இதை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கே கட்சி, மற்றும் எதிர்க்கட்சியினர் சேர்ந்து நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நவம்பர் 14ஆம் தேதி, அதாவது இரு தினங்கள் முன்பாக நடைபெற்றது. அதில் ராஜபக்சே அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை என்பது உறுதியானது. இதையடுத்து அவரது ஆட்சி நீடிக்காது என்று சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்தார். இந்த நிலையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனா, சபாநாயகரையும், எதிர்க்கட்சியினரையும் சந்தித்து மீண்டும் ஒருமுறை நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நடத்தும்படியும், கடந்த முறை போல நாடாளுமன்றத்தில் அமளி நடக்கும்போது, இல்லாமல், அமைதியாக இருக்கும்போது இந்த வாக்கெடுப்பு நடத்துவது தான் ஜனநாயகத்திற்கு உகந்தது என்றும் அறிவுரை வழங்கினார்.இதையடுத்து, இன்று நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக இரண்டாவது முறையாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால் போதிய கட்சிகளின் பெரும்பான்மை தனக்கு இல்லை என்பதை தெரிந்து வைத்திருக்கும் ராஜபக்சே, எப்படியாவது இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை கலைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் தனது கட்சியினரை ஏவி விட்டார். அவை ஆரம்பிக்கும் போதில், இருந்தே, ராஜபக்சே கட்சியினர், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டிய நிலையில் இந்த போராட்டம் மேலும் உக்கிரமானது. சபாநாயகர் மீது ராஜபக்சே ஆதரவு எம்பிக்கள் மிளகாய் பொடியை தூவி அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனால், அவையை நடத்த முடியாத சூழ்நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து நவம்பர் 19ஆம் தேதிக்கு அவையை, ஒத்திவைத்து சபாநாயகர் கிளம்பி சென்றுவிட்டார். இன்றைய நாடாளுமன்ற அமளியின்போது சில உறுப்பினர்களுக்கு காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை