ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மெகா திட்டம் தயாரிப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் மெகா திட்டம் தயாரிக்கப் பட்டு உள்ளது.

தமிழகத்தின் பூம்புகார் உட்பட, நாட்டின் கடலோர பகுதிகளில், 14 வேலைவாய்ப்பு மண்டலங்களை உருவாக்கும், மத்திய கப்பல் போக்குவரத்து துறையின் திட்டத்துக்கு, 'நிடி ஆயோக்' அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த திட்டம் மூலம், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் நோக்கில், நாடு முழுவதும், 14 மெகா வேலைவாய்ப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன.

 மத்திய கப்பல் போக்குவரத்து துறையின் இந்த திட்டத்துக்கு, அரசுக்கு திட்டங்கள் உருவாக்கலில் ஆலோசனை வழங்கும் அமைப்பான, 'நிடி ஆயோக்'கின், திட்ட ஆய்வு, மேலாண்மை பிரிவு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு, 1 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என தெரிகிறது.

நிடி ஆயோக் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, இந்த திட்டம் குறித்து, அமைச்சரவை குழு பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும் என கூறப்படுகிறது. அதை தொடர்ந்து உருவாக்கப்படும் வேலை வாய்ப்பு மண்டலங்களில், தொழிற்சாலைகளை அமைக்கும்படி, நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

இது குறித்து, அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில், வேலை வாய்ப்பு மண்டலங்களைஉருவாக்குவதில், பிரதமர் அலுவலகம் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இவற்றின் மூலம், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என, பிரதமர் அலுவலகம் கூறி வருகிறது.  அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடப்பதற்கு முன், வேலைவாய்ப்பு மண்டலங்கள் குறித்து  இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. 

தொழிற்சாலைகள், அவை உருவாக்கும் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அடிப்படையில், நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத சலுகைகள் வழங்கப்படும். தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு, ஒற்றைச் சாளர முறையில் ஒப்புதல் வழங்கப்படும் என தெரிகிறது.

இந்த திட்டப்படி, 14 மெகா வேலைவாய்ப்பு மண்டலங்கள், நாட்டின் கடலோர மாநிலங்களில் அமைக்கப்பட உள்ளன. இந்த மண்டலங்களில், சிமெண்ட், உணவுப் பொருள், மரப்பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், ஆடைகள், தோல் பொருள், ஆபரண கற்கள், நகைகள் தயாரிப்பு உள்ளிட்ட, 35 தொழிற்சாலைகளின் தொகுப்பு இடம்பெறும்.

வேலைவாய்ப்பு மண்டலங்களுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 1 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என, முதல் கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இந்த தொகையை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து செலவிடும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களின் அரசுகள், சம்பந்தப்பட்ட பகுதிகளில், குறைந்தபட்சம், 2,000 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும்.துறைமுகம் சார்ந்த தொழில் மயமாக்கல் அடிப்படையில், வேலை வாய்ப்பு மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளன.

 இதன் மூலம், 'இந்தியாவில் தயாரியுங்கள்' பிரசாரத்துக்கு கூடுதல் ஊக்கம் அளிக்கவும், துறைமுகம் சார்ந்த தொழில் நடவடிக்கைகளில், இந்தியாவை பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையச் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின், நாகப்பட்டினம் மாவட்டம், பூம்புகார், வி.சி.ஐ.சி., எனப்படும், விசாகப்பட்டினம் - சென்னை தொழில் பாதை, ராமேஸ்வரம், குஜராத்தில் கட்ச், சூர்யபூர், சவுராஷ்டிரா, கேரளாவில் மலபார் உட்பட, 14 வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன.

 இவ்வாறு அவர் கூறினார்.

 மெகா வேலைவாய்ப்பு திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் கிடைத்ததும், உற்பத்தி களங்கள் அமைக்க, தொழிற்சாலைகளுக்கு அழைப்பு விடுக்கப்படும்

மூலக்கதை