ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியல்: காங்கிரஸ் சார்பில் வெளியீடு

தினகரன்  தினகரன்
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியல்: காங்கிரஸ் சார்பில் வெளியீடு

புதுடெல்லி: ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல்  டிசம்பர் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டது. மொத்தமாக 200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்கு டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் கட்சியான பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் 152 வேட்பாளர்களின் பெயர்களை  கொண்ட முதல் பட்டியலை காங்கிரஸ் தலைமை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் முன்னாள் முதல் மந்திரியான அசோக் கேலாட், சர்தார்பூர் தொகுதியிலும், அம்மாநில காங்கிரஸ் தலைவரான சச்சின் பைலட், டோங்க் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதனை தொடர்ந்து தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் கிரிஜா வியாஸ், உதய்பூர் தொகுதியிலும், தற்போது சட்டசபையில் எதிர்கட்சி தலைவராக பதவி வகிக்கும் ராமேஷ்வர் லால், நோக்ஹா தொகுதியிலும் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சி.பி. ஜோஷி, நத்வாரா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 162 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை இருகட்டங்களாக  பா.ஜ.க. ஏற்கனவே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை