இலங்கை முன்னிலை..... ரோஷன் சில்வா பொறுப்பான ஆட்டம்

தினகரன்  தினகரன்
இலங்கை முன்னிலை..... ரோஷன் சில்வா பொறுப்பான ஆட்டம்

கண்டி: இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்டில் ரோஷன் சில்வாவின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்சில் இலங்கை அணி முன்னிலை பெற்றது. பல்லெகெலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 285 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இலங்கை முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 26 ரன்களுடன் இருந்தது. கருணாரத்னே 19, புஷ்பகுமாரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் புஷ்பகுமாரா (4), மொயீன் அலி சுழலில் ஆட்டமிழந்தார். ஆனாலும், கருணாரத்னே, தனஞ்ஜெயா டிசில்வா இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு கைகொடுத்தனர். இந்த ஜோடி 96 ரன் சேர்த்த நிலையில் கருணாரத்னே (63) ரன் அவுட்டானார். பின்னர் தனஞ்ஜெயா (59), மேத்யூஸ் (20) இருவரும் ரஷித் பந்திலும், மெண்டிஸ் (1) லீச் பந்திலும் வெளியேற மீண்டும் தடுமாற்றம் ஏற்பட்டது. 165 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்த நிலையில் ரோஷன் சில்வா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.பேட்டிங் முனையை ஆக்கிரமித்த இவர் அரைசதம் அடித்தார். டிக்வெல்லா (26), பெரேரா (15), அகிலா தனஞ்ஜெயா  (31) ஆகியோர் நல்ல ஒத்துழைப்பு தந்தனர். இதனால், முதல் இன்னிங்சில் இலங்கை முன்னிலை பெற்றது. சதத்தை நெருங்கிய ரோஷன் சில்வா 85 ரன் எடுத்த நிலையில் ரஷித் சுழலில் ஆட்டமிழந்தார். இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 336 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, 46 ரன் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கியது. பர்ன்ஸ், லீச் துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஒரே ஒரு ஓவர் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி ரன், விக்கெட் ஏதுமின்றி உள்ளது. இன்று 3ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

மூலக்கதை