நிறுத்தம்! பஸ் போக்குவரத்து மாலை 6:00 மணிக்கு மேல்...பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை

தினமலர்  தினமலர்
நிறுத்தம்! பஸ் போக்குவரத்து மாலை 6:00 மணிக்கு மேல்...பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் கஜா புயலால் கனமழை மற்றும் பலத்த காற்று வீசி மரங்கள் சாயும் நிலை இருப்பதால் நேற்று மாலை முதல் 12:00 மணி நேரம் அரசு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள கஜா புயல் நேற்று இரவு நாகப்பட்டிணம் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.கரையை நெருங்கும்போது மணிக்கு 80 கி.மீ., முதல் 100 கி.மீ., வரை பலத்த காற்று வீசும். அதனால் பொது மக்கள் வீட்டை விடடு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.கஜா புயலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர். ஒன்றிய, நகராட்சி அளவில் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். புயலில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தயாராக இருந்தனர்.கடலுார் மாவட்ட மக்கள் 73057 15721 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணில் 'கஜா' புயலினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகள் தொடர்பான தகவலை பதிவு செய்யலாம் என கடலுார் மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டது.பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறைகஜா புயல் நாகப்பட்டிணம் அருகே கடந்தாலும் கடலுார் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் மிகவும் பழைய கட்டங்களால் ஆபத்து ஏற்படலாம் என்பதாலும், பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் என்பதாலும் இன்று அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.அரசு பஸ்கள் ரத்துபயணிகள் அவதிபுயல் கரையை நெருங்கி வந்ததால் நேற்று மழை விட்டு விட்டு பெய்தது. இதன் காரணமாக நேற்று பொது மக்கள் ஒரு வித அச்சத்துடனேயே காய்கறிகள், மளிகைப் பொருட்கள் வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர். இரவு நேரத்தில் புயல் கரையைக் கடக்க இருப்பதால் சாலையில் மரங்கள் விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.அதையொட்டி அரசு பஸ்கள் நேற்று மாலை 6:00 மணி முதல் இன்று காலை 6:00 மணி வரை 12 மணி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளன. தொலைதுாரத்தில் இருந்து வரும் பஸ்கள் வழக்கம் போல் சென்றன. அரசு பஸ்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் வெளியூர் மற்றும் உள்ளூர் செல்லும் பயணிகள் அவதியடைந்தனர். அதேபோன்று, தனியார் பஸ் போக்குவரத்தையும் ரத்து செய்யுமாறு அதன் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.ரயில் சேவையும் ரத்துகஜா புயல் நாகப்பட்டிணம் அருகே கடப்பதால் மயிலாடுதுறை வழியாக விழுப்புரத்தில் இருந்து கடலுார் வழியாக ராமேஸ்வரம் செல்லக்கூடிய விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து கடலுார், விருத்தாசலம் வழியாக செல்லக்கூடிய ராமேஸ்வரம் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டது. மன்னார்குடியிலிருந்து சென்னை செல்லும் மன்னை விரைவு ரயில், தஞ்சாவூர் - சென்னை ரயில், காரைக்கால் - சென்னை செல்லும் கம்பன் விரைவு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மூலக்கதை