பயணிகள் பயன்பாட்டுக்கு, 'சலூன் கோச்': ரயில்வே சுற்றுலா கழகம் திட்டம்

தினமலர்  தினமலர்
பயணிகள் பயன்பாட்டுக்கு, சலூன் கோச்: ரயில்வே சுற்றுலா கழகம் திட்டம்

திருப்பூர்:ரயில்வே உயரதிகாரிகள் மற்றும் வி.வி.ஐ.பி.,க்கள் மட்டுமே பயன்படுத்தி வந்த, 'சலுான் கோச்' சொகுசு ரயில் பயண வசதி, பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.இந்திய ரயில்வே துணை நிறுவனமாக, இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) செயல்படுகிறது.
ரயில்வே ஸ்டேஷன்களுக்கான உணவு, 'ஆன்லைன்' டிக்கெட், பயணிகளுக்கான சுற்றுலா, ஆன்மிக யாத்திரை ரயில்களை பிரத்யேகமாக இயக்குகிறது.அதன்படி, 'சலுான் கோச்' எனப்படும், சொகுசு பெட்டியில் பயணிக்கும் வசதி, பயணிகளுக்கு அறிமுகம் செய்ய உள்ளது. முற்றிலும் ஏ.சி., வசதி, இருக்கை, படுக்கை வசதி, கழிவறை, சமையலறை, ரயில் பெட்டியில் இருந்தபடியே, வெளியழகை அனைத்து திசைகளிலும் ரசிக்கும் வகையில் கண்ணாடி ஜன்னல் என, இந்த பெட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.இதுநாள் வரை இவ்வகை ரயில் பெட்டிகளை, ரயில்வே வாரிய தலைவர், பொது மேலாளர் உட்பட உயரதிகாரிகள், வி.வி.ஐ.பி.,க்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்.
ஐ.ஆர்.சி.டி.சி., உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,'இந்த சொகுசு பெட்டி பயணத்தை, பயணிகள் பயன்பாடுக்கு விட, ஓராண்டுக்கு முன்பே ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. ஒரே நேரத்தில், ஆறு பேர் இந்த பெட்டியில் பயணம் செய்யலாம். முன்பதிவு செய்ய குறைந்தபட்ச தொகை 1.50 லட்சம் ரூபாய். ஓடும் ரயிலில் பிறந்த நாள் விழா, திருமண தம்பதிகளுக்கு தேனிலவு, பெரிய நிறுவனங்களின் ஆலோசனைக்கூட்டம் நடத்த, இப்பெட்டி அனுமதிக்கப்படும். முதற்கட்டமாக சென்னை, திருவனந்தபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த ரயில் இயக்கப்படும்' என்றனர்.

மூலக்கதை