இலங்கை பார்லி.,யில் கடும் அமளி

தினமலர்  தினமலர்
இலங்கை பார்லி.,யில் கடும் அமளி

கொழும்பு:இலங்கை பார்லிமென்டில், ராஜபக்சே ஆதரவு, எம்.பி.,க்களுக்கும், ரணில் விக்ரமசிங்கே ஆதரவு, எம்.பி.,க்களுக்கும் இடையே நடந்த காரசார விவாதம், கை கலப்பில் முடிந்தது. இதில், எம்.பி.,க்கள் சிலர் காயமடைந்தனர்; சபாநாயகரை தாக்கவும் முயற்சி நடந்தது.
அண்டை நாடான இலங்கையில், அதிபர் சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம், அந்நாட்டு பார்லிமென்டில் வெற்றி பெற்றது. இதையடுத்து, ராஜபக்சே, பிரதமராக நீடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பெரும்பாலான, எம்.பி.,க்களின் ஆதரவுடன், ரணில் மீண்டும் பிரதமராக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்நாட்டு பார்லிமென்ட், நேற்று மீண்டும் கூடியது.
அப்போது, ராஜபக்சே, சபையில் உரையாற்ற, சபாநாயகர் ஜெயசூர்யாவிடம் அனுமதி கோரினார். பிரதமராக இல்லாமல், எம்.பி., என்ற அடிப்படையில் உரையாற்ற அனுமதி அளிப்பதாக, ஜெயசூர்யா கூறினார்.இதையடுத்து பேசிய ராஜபக்சே, ''பார்லிமென்டை கலைத்து, புதிதாக தேர்தல் நடத்த வேண்டும்,'' என, கோரிக்கை விடுத்தார்.
இதற்கு, ரணில் ஆதரவு, எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். ராஜபக்சேவுக்கு ஆதரவாக, சில எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர்.இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வாக்குவாதம், சில நிமிடங்களில் கை கலப்பில் முடிந்தது. இரு தரப்பினரும், ஒருவருக்கொருவர் தாக்கினர். இதில், சில, எம்.பி.,க்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து, ஜெயசூர்யாவின் இருக்கையை நோக்கி, ராஜபக்சே ஆதரவு, எம்.பி.,க்கள் சிலர் நகர, ரணில் ஆதரவு எம்.பி.,க்கள் அவரை சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்தனர்.இதனால், அந்நாட்டு பார்லிமென்டில் திடீர்பரபரப்பு ஏற்பட்டது. அவர்களில் சிலர், ஜெயசூர்யாவை தாக்க முயன்றனர். அவர் மீது, பிளாஸ்டிக் பொருட்களை வீசினர்.எனினும், எந்த காயமும் இன்றி அவர் தப்பினார். இதையடுத்து, பார்லிமென்ட் ஒத்தி வைக்கப்படுவதாக, சபாநாயகர் ஜெயசூர்யா அறிவித்தார்.

இதற்கிடையே, அதிபர் சிறிசேன, நேற்று இரவு, சபாநாயகர் ஜெயசூர்யாவை சந்தித்து, ஆலோசனை நடத்தினார்.இதற்கிடையே, பார்லிமென்டில் ரகளையில் ஈடுபட்ட, எம்.பி.,க்களில் ஒருவர், கையில் கத்தியுடன் காணப்பட்ட புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை