புழல் 23, 25, 32-வது வார்டுகளில் கிடப்பில் போடப்பட்ட 3 குடிநீர் தொட்டி பணிகள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
புழல் 23, 25, 32வது வார்டுகளில் கிடப்பில் போடப்பட்ட 3 குடிநீர் தொட்டி பணிகள்

புழல்: புழல் 23, 25, 32, ஆகிய 3 வார்டுகளிலும் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டிபணிகள் நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீரை தேடி அல்லல்பட்டு வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம் 25-வது வார்டான புழல் எம்ஜிஆர் நகர், அறிஞர் அண்ணா நகர், ராகவேந்திரா நகர், மதுரா மேட்டுப்பாளையம், லிங்கம் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக சென்னை மாநகராட்சி குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், எம்ஜிஆர் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு சுமார் 3 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்டும் பணிகள் துவங்கின.

ஆனால், இப்பணிகள் கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக நிறைவு பெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

  இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் இங்கு குடிநீர் தொட்டி கட்டுமானப் பகுதியில் தளவாட பொருட்களை பாதுகாப்பதற்காக, கடந்த 5 ஆண்டுகளாக ஒப்பந்த காவலராக ராஜா என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு கடந்த 5 மாதங்களாக குறைந்தபட்ச ஊதியம்கூட வழங்கப்படவில்லை. இதனால் அவர் பணியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.

இதையடுத்து அவர் பாதுகாப்பு பணியிலிருந்து விலகிவிட்டால், அங்கு பல லட்சம் மதிப்புள்ள கட்டுமான பொருட்கள் கொள்ளை போக வாய்ப்பு உள்ளது. இதேேபால் புழல் 23-வது வார்டு பெண்கள் சிறைச்சாலை அருகே புதிதாக கட்டப்படும் 50 லட்சம் கொள்ளளவு மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி, புழல் 32-வது வார்டான லட்சுமிபுரம் பகுதியில் கட்டப்படும் குடிநீர் தேக்கத் தொட்டி பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘இக்குடிநீர் தேக்கத் தொட்டிகளுக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை.

அவ்வாறு குறைந்தபட்ச நிதி அளித்தாலும், அவற்றில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் கமிஷன் கேட்டு தொந்தரவு செய்கின்றனர். இதனால் ஒப்பந்ததாரர்கள் பணிகளை அப்படியே விட்டுவிட்டு செல்லும் அவலநிலை உள்ளது’ என்றார்.

எனவே, இந்த 3 குடிநீர் தேக்கத் தொட்டி பணிகளை முழுமையாக விரைவில் முடிப்பதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை