9ம்வகுப்பு மாணவி பலாத்காரம் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
9ம்வகுப்பு மாணவி பலாத்காரம் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை

கடலூர்: கடந்த 2016ம் ஆண்டு பண்ருட்டியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் திருவாமூரை சேர்ந்த, 13 வயது மாணவி 9ம் வகுப்பு படித்து வந்தார். அதே பள்ளியில்  ராஜீவ்காந்தி(33) என்பவர் கணக்கு ஆசிரியராக பணியாற்றினார்.

இவர் 6ம் வகுப்பிலிருந்தே அந்த மாணவியை அடிக்கடி கேலியும் கிண்டலும் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6-6-2016 அன்று காலை 8. 30 மணிக்கு பள்ளி செல்லும் வழியில் கடையில் நோட்டு புத்தகம் வாங்கி கொண்டிருந்த மாணவியை  ராஜீவ்காந்தி தன்னுடன் வருமாறும், இல்லை என்றால் தம்பி, தங்கையை கொன்றுவிடுவதாக மிரட்டி பைக்கில் கடத்தி சென்றார்.

பைக்கிலேயே மாணவியை திருப்பதி அழைத்துச் சென்ற ராஜீவ்காந்தி, அங்கு கோயிலின் முன்பாக கட்டாய தாலி கட்டினார். அப்பகுதியில் ரூம் எடுத்து தங்கி  பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனிடையே மாணவியின் பெற்றோர் பண்ருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியையும் அவரை கடத்திய ராஜீவ்காந்தியையும் தேடினர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த, ராஜீவ்காந்தி  13-6-2016 அன்று சேலத்தில் இருந்து பண்ருட்டிக்கு மாணவியை தனியாக பஸ்சில் அனுப்பி வைத்தார்.

அந்த மாணவி தனக்கு நடந்த கொடுமைகளை  பெற்றோரிடம் சொல்லி கதறி அழுதார்.

இதுபற்றி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜீவ்காந்தியை கைது  செய்தனர்.

அவர் மீது மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இந்த நிலையில், இவ்வழக்கில் மாவட்ட நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று தீர்ப்பு  வழங்கினார்.

அதில் போக்சோ சட்டத்தின் கீழ் ராஜீவ்காந்திக்கு ஆயுள் தண்டனையும் ரூ. ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது.

அபராத தொகையை கட்டத்  தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.



.

மூலக்கதை