தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் லஞ்ச ஒழிப்பு போலீசில் பிரேக் இன்ஸ்பெக்டர் ஆஜர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
தகுதி சான்றிதழ் வழங்க லஞ்சம் லஞ்ச ஒழிப்பு போலீசில் பிரேக் இன்ஸ்பெக்டர் ஆஜர்

விழுப்புரம்: கடலூர் மாவட்டம் செம்மண்டலம் தவுலத் நகரைச் சேர்ந்தவர் பாபு(55). இவர் கள்ளக்குறிச்சி ஆர்டிஓ அலுவலகத்தில் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டராக  பணியாற்றி வந்தார்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கூத்தக்குடியைச் சேர்ந்த ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர் முத்துக்குமாரின் சுற்றுலா வேனுக்கு தகுதி  சான்றிதழ் வழங்குவதற்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் பெற்றபோது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த செப்டம்பர் மாதம் 11ம் தேதி பாபுவை கைது செய்தனர்.   இதற்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் செந்தில்குமாரும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து இருவரும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். பாபுவின் வங்கிக்கணக்குகளை முடக்கினர்.

அவரது வீடு, வங்கி லாக்கர்களில்  சோதனையிட்டபோது 13 கிலோ தங்கம், கோடிக்கணக்கில் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆத்தூரில் உள்ள செந்தில்குமார் வங்கி லாக்கரிலும் நகை,  வெள்ளி இருந்தது. இதனிடையே செந்தில்குமார் ஜாமீனில் வெளிேயவந்த நிலையில், பாபு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 63 நாட்களாக சிறையில் இருந்த பாபு  மீண்டும் விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடத்திய நீதிபதி பிரியா, நிபந்தனை  ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

அத்துடன் தினமும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்நிலையத்தில் ஆஜராகி ஒரு மாதம் கையெழுத்திட வேண்டும் என்று  உத்தரவிட்டார்.

இதன்படி நேற்று கடலூர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பாபு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு காவல்நிலையத்தில் ஆஜராகி  கையெழுத்திட்டார்.

.

மூலக்கதை