தூத்துக்குடி, நெல்லையில் பன்றிக்காய்ச்சலுக்கு மாணவன் ரயில்வே ஊழியர் பரிதாப பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தூத்துக்குடி, நெல்லையில் பன்றிக்காய்ச்சலுக்கு மாணவன் ரயில்வே ஊழியர் பரிதாப பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி, நெல்லையில் பன்றிக்காய்ச்சலுக்கு 6ம் வகுப்பு மாணவன், ரயில்வே ஊழியர் பரிதாபமாக இறந்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக வைரஸ் காய்ச்சல், நிமோனியா, மலேரியா, டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலின் பாதிப்பு இருந்து வருகிறது.   டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் பாதிப்பால் 5க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 14 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பதை மாவட்ட நிர்வாகமும்  ஒப்புக் கொண்டுள்ளது.

தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக  உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 131 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

டெங்கு பாதித்த  குழந்தைகள் உள்ளிட்ட பலர், சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி உள்ளனர்.

இந்நிலையில் பன்றிக்காய்ச்சலுக்கு 6ம் வகுப்பு மாணவன் பலியாகியுள்ளான்.

இதுகுறித்த  விவரம் வருமாறு:தூத்துக்குடி முத்தம்மாள் காலனியை சேர்ந்த மந்திரமூர்த்தி மகன் சக்திகபிலன்(11). சில்வர்புரத்தில் உள்ள ஒரு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

காய்ச்சலால்  பாதிக்கப்பட்ட சிறுவன், கடந்த 9ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். நேற்று முன்தினம் சக்திகபிலனின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இரவில் சிகிச்சை பலனின்றி இறந்தான். நேற்று  காலை அவனது ரத்த பரிசோதனை அறிக்கை வந்தது.

அதில் மாணவனுக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கையாக அவனது பெற்றோர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது.
இதேபோல் பாளை. ரயில்வே ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (47).

இவர், நெல்லையில் ரயில்வே டிராக்மேனாக பணியாற்றி வந்தார். காய்ச்சல்  பாதிப்புக்காக, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

அங்கு அவருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக மதுரை ரயில்வே மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

பலியான ஆறுமுக  நயினாருக்கு ஆனந்தவள்ளி என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். பன்றிக்காய்ச்சலுக்கு தினமும் உயிரிழப்புகள் தொடர்வதால் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களிடையே கடும் பீதி நிலவுகிறது.

குழந்தை உயிரிழப்பு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் மோதிலால் நேரு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன்(40). ஓட்டல் வைத்துள்ளார்.

இவரது மனைவி சுகந்தி. இவர்களது மகள்  நித்ய(3).

குழந்தைக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்ததால் மயிலாடுதுறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் காய்ச்சல்  நிற்கவில்லை. இதன்பிறகு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை நித்ய நேற்று  இரவு இறந்தது.

.

மூலக்கதை