அதிக கச்சா எண்ணெய், எரிவாயுவை அமெரிக்காவில் இருந்துஇறக்குமதி செய்ய தயார்: வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்

தினகரன்  தினகரன்
அதிக கச்சா எண்ணெய், எரிவாயுவை அமெரிக்காவில் இருந்துஇறக்குமதி செய்ய தயார்: வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்

புதுடெல்லி: அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ெணய் இறக்குமதி செய்யப்படும் என இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே  தெரிவித்துள்ளார்.  கச்சா எண்ணெய் தேவைக்கு 80 சதவீதம் இறக்குமதியையே இந்தியா சார்ந்துள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா  எண்ணெய் விலை சரிவால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சுமார் ஒரு மாதமாக பெட்ரோல், டீசல் விலையை குறைத்து வருகின்றன. இந்தியா ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை கணிசமான அளவு இறக்குமதி செய்கிறது. ஆனால், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்தியா உட்பட 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு  அளிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து தற்காலிகமாக குறிப்பிட்ட அளவு வரை மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதி  அளித்துள்ளது.  இதனால் கூடுதல் தேவைக்கு பிற நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது. இந்த  நிலையில், அமெரிக்காவில் இருந்து கூடுதலாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது. சிங்கப்பூரில் ஏசியான் மாநாட்டில் பங்கேற்ற இந்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோலகே நேற்று கூறியதாவது:  கச்சா எண்ணெயை  அமெரிக்காவில் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்ய தயாராக உள்ளோம். இதுபோல் எரிவாயுவும் இறக்குமதி செய்யபடும். இதுகுறித்த விருப்பத்தை  அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அமெரிக்காவில் இருந்து400 கோடி டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய் இறக்குமதி  செய்யப்படும் என்றார். ஈரான் மீதான தடையால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் பிரண்ட் கச்சா எண்ணெய் பேரல்  70 டாலருக்கு கீழ் சரிந்துவிட்டது. இதனால் எண்ணெய் வள நாடுகளின் வருவாய் குறைந்துள்ளது. எனவே ஒபெக் மற்றும் ஒபெக் அமைப்பில் இல்லாத  நாடுகளும் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன. மிகப்பெரிய எண்ணெய் வளம் மிகுந்த நாடான சவூதி அரேபியா சில நாட்களுக்கு முன்பு  எண்ணெய் உற்பத்தியை குறைக்க அழைப்பு விடுத்துள்ளது.

மூலக்கதை