பா.ஜ.க., அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த சூளுரை ஏற்போம் : தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

PARIS TAMIL  PARIS TAMIL
பா.ஜ.க., அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த சூளுரை ஏற்போம் : தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்

கருணாநிதி மறைந்து 100-வது நாளையொட்டி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தன் உயரம் தனக்கு தெரியும் என தன்னடக்கத்துடன் அறிவித்த கருணாநிதிதான், இந்தியாவின் மிகப் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய தேசிய அளவிலான கூட்டணிகளை உருவாக்கியவர். பல பிரதமர்களையும், ஜனாதிபதிகளையும் தேர்ந்தெடுத்தவர். குறைந்தபட்ச பொது செயல்திட்டம் என்ற வடிவமைப்பை உருவாக்கிடச்செய்து, அதன் வாயிலாக ஒவ்வொரு மாநிலத்தின் நலன்களையும் பாதுகாத்தவர். அவர் வகுத்து தந்த வழிமுறை இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாக இருக்கிறது.


1988-ம் ஆண்டு அன்றைய ஆந்திர முதல்-மந்திரி என்.டி.ராமராவை ஒருங்கிணைப்பாளராக கொண்டு சென்னையில் கருணாநிதியின் பெருமுயற்சியால் ஏற்பாடு செய்யப்பட்ட உலகம் வியந்த பிரம்மாண்டமான பேரணியுடன் தொடங்கப்பட்ட தேசிய முன்னணிதான், 1989 தேர்தலில் இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக வழி வகுத்தது.

30 ஆண்டுகள் கடந்த நிலையில், அதே ஆந்திர மாநிலத்தின் இன்றைய முதல்-மந்திரியும் என்.டி.ஆர். மருமகனுமான சந்திரபாபு நாயுடு, இந்தியாவை ஆளும் மதவெறி பாசிச சக்திகளிடமிருந்து நாட்டை மீட்கும் நல்லெண்ணத்துடன், மதசார்பற்ற வலுவான அணி அமைக்கும் முயற்சியாக கருணாநிதியின் மகனும் உங்களில் ஒருவனுமான என்னை சந்தித்தார்.

அந்த நல் முயற்சிக்கு கட்சி விரும்பித் துணை நிற்கும் என்பதை தெரிவித்துள்ளேன். அதே எண்ணத்துடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியும், என்னை சந்தித்து மதவெறி சக்திக்கு எதிரான மதநல்லிணக்க சமய சார்பற்ற அணியை தேசிய அளவில் ஒருங்கிணைப்பது குறித்து உரையாடினார். நாட்டின் எதிர்காலத்தை காக்கும் நல்ல சமிக்ஞைகள் வெளிப்பட தொடங்கிவிட்டன.

அதற்கு கட்டியம் கூறும் வகையில்தான், கடந்த 8-ந் தேதி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் நகரில் தி.மு.க.வின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. ஜனநாயக அறப்போர் என்ற தலைப்புடன் கொள்ளைக்கார அ.தி.மு.க. ஆட்சியையும், பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் அதிகாரத்திலிருந்து அகற்றிடும் இலக்குடன் கட்சியின் படைவரிசை அங்கே திரண்டது. தமிழகம் முழுவதும் படையணி திரட்டப்படும். இந்திய அளவில் அது வலிமைப்படுத்தப்படும். மக்கள் விரோத ஆட்சி செய்யும் இந்த இரு பிரிவினரையும், அவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிப்போரையும் இந்த ஜனநாயக படை எதிர்கொள்ளும்.

தமிழக அரசு பெருங்கொள்ளைக் கூட்டத்தின் கையில் சிக்கி நாள்தோறும் சீரழிகிறது. இந்தியா மதவெறி பாசிச ஆட்சியாளர்களின் கொடூர பிடியில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. இந்த இரண்டையும் ஜனநாயக வழியில் அகற்றுவதும் விரட்டுவதும்தான் நமது ஒரே இலக்கு. சூளுரை ஏற்போம்

தமிழகத்திலும், இந்திய அளவிலும் ஒரே நோக்குடன் துணை நிற்கும் தோழமை சக்திகளை அரவணைத்து களம் காண்போம். மாநில உரிமைகளை அடமானம் வைத்துவிட்டு, அரசு கருவூலத்தை கொள்ளையடித்து, வருமானம் பார்ப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியையும், பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து மக்களை வஞ்சித்துவிட்டு நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து, அமைதியை கெடுக்கும் மதவெறியுடன் கோலோச்சும் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் வீழ்த்திட, கருணாநிதியின் நினைவு போற்றும் 100-வது நாளில் நெஞ்சுயர்த்தி சூளுரைப்போம்.

அவர் வழியில் தொடர்ந்து செயலாற்றி, தமிழ் உலகம் மகிழ, வென்று காட்டுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

மூலக்கதை