'பெயரை எப்போது மாற்றுவீங்க' : கொந்தளிக்கிறார் மம்தா

தினமலர்  தினமலர்
பெயரை எப்போது மாற்றுவீங்க : கொந்தளிக்கிறார் மம்தா

கோல்கட்டா:''மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை, 'பங்க்ளா' என, மாற்றுவதற்கான தீர்மானம், ஜூலையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மீது, இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இது குறித்து, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:மக்களின் விருப்பதற்கு ஏற்ப, மாநிலத்தின் பெயரை, மேற்கு வங்கம் என்பதை, 'பங்க்ளா' என, வங்கம், ஆங்கிலம், ஹிந்தியில் மாற்றம் செய்வதற்கான தீர்மானம், ஜூலையில், சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், பா.ஜ., ஆளும் பல மாநிலங்களில், பல நகரங்கள், ஊர்களின் பெயர்கள் மாற்றப்படுகின்றன. அவற்றின் மீது நடவடிக்கை எடுத்துள்ள, பா.ஜ., அரசு, எங்கள் கோரிக்கை மீது மட்டும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?ஒரிசா பெயர் ஒடிசாவாகவும்; பாண்டிச்சேரி பெயர் புதுச்சேரியாகவும்; மெட்ராஸ் பெயர் சென்னை; பெங்களூர் பெயர் பெங்களூரு என, மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. ஆனால், மேற்கு வங்கத்தின் பெயரைமாற்றுவதற்கு மட்டும் ஒப்புதல் அளிக்காதது ஏன்?இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை