ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 அரை இறுதியில் ஆஸ்திரேலியா

தினகரன்  தினகரன்
ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 அரை இறுதியில் ஆஸ்திரேலியா

கயானா: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் அரை இறுதியில் விளையாட ஆஸ்திரேலிய அணி தகுதி பெற்றது. புராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில், நியூசிலாந்து அணியுடன் மோதிய ஆஸ்திரேலியா டாசில் வென்று பேட் செய்தது. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன் குவித்தது. மூனி 26, அலிஸா ஹீலி 53, ரச்சேல் ஹேன்ஸ் 29* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 17.3 ஓவரில் 120 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. சூஸி பேட்ஸ் 48 ரன், கேத்தி மார்டின் 24, காஸ்பரெக் 12 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர் (2 பேர் டக் அவுட்). ஆஸி. பந்துவீச்சில் ஷுட் 3, மோலினக்ஸ், கிம்மின்ஸ் தலா 2, பெர்ரி, வாரிஹம், கார்ட்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அலிஸா ஹீலி சிறந்த வீராங்கனை விருது பெற்றார். 33 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய ஆஸ்திரேலியா 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. பி பிரிவில் ஹாட்ரிக் வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முன்னிலை வகிக்கும் ஆஸி. அணி அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தது. இந்தியா 2 போட்டியில் வென்று 4 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பாகிஸ்தான் 3 போட்டியில் 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து (0), அயர்லாந்து (0) அணிகள் 4வது, 5வது இடத்தில் பின்தங்கியுள்ளன.

மூலக்கதை