சிங்கப்பூர் பின்டெக் விழாவில் மோடி பேச்சு முதலீடு செய்ய சிறந்த இடம் இந்தியா

தினகரன்  தினகரன்
சிங்கப்பூர் பின்டெக் விழாவில் மோடி பேச்சு முதலீடு செய்ய சிறந்த இடம் இந்தியா

சிங்கப்பூர்: ‘‘தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலீடு செய்ய சிறந்த இடமாக இந்தியா திகழ்கிறது’’ என்று பிரதமர் மோடி சிங்கப்பூரில் நடைபெற்ற பின்டெக் விழாவில் பேசினார். பின்ெடக் தொழில்நுட்ப மாநாடு சிங்கப்பூரில் கடந்த 12ம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.  3 நாட்கள் கருத்தரங்கம், தொழில்நுட்ப நிறுவனங்களின் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இதில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிங்கப்பூருக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி நேற்று பங்கேற்று பேசினார். கடந்த 2016ம் ஆண்டு தொடங்கிய இந்த கூட்டமைப்பு தற்போது 3வது ஆண்டாக இந்த விழாவை நடத்துகிறது.  இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி இந்த விழாவில் பேசிய முதல் உலக தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: சிங்கப்பூர் பின்டெக் திருவிழாவில் பங்கேற்ற முதல் பிரதமர் என்ற பெருமை எனக்கு கிடைத்த கவுரவமாக கருதகிறேன். தொழில்நுட்ப மாற்றத்தால் இந்தியாவில் எல்லையற்ற வாய்ப்புகள் உருவாகியுள்ளன. இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியால் ஏற்பட்ட பொருளாதார மாற்றத்தின் அத்தாட்சியாக இந்த நிகழ்ச்சி விளங்குகிறது. சில ஆண்டுகளிலேயே 120 கோடி இந்தியர்களுக்கு பயோமெட்ரிக் அடையாள அட்டைகளை வழங்கியுள்ளோம். இந்தியா பல்வேறு பிரிவுகளும் சவால்களும் நிறைந்த நாடு. டிஜிட்டல் முறையிலான பணம் செலுத்துமுறை இந்தியர்கள் ஒவ்வொருவரையும் சென்றடைந்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் இந்த முறையில்  பணப் பரிமாற்றம் 1500 மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பண பரிவர்த்தனை 30 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் தொழில்நுட்ப பண பரிமாற்றத்தால் அணுகும் முறை, சேர்த்தல், தொடர்பு, எளிமையான வாழ்க்கை முறை, வாய்ப்புகள் திறன் ஆகியவை இந்தியர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த டிஜிட்டல் பணபரிமாற்றம் நம்பகத்தன்ைமயை ஏற்படுத்தியுள்ளதுடன், ஊழலையும் ஒழித்துள்ளது. எனவே, இந்தியா தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலீடு செய்ய சிறந்த இடமாக மாறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.தீவிரவாதம் ஒரு நாட்டில் இருந்து தான் உருவாகிறது சிங்கப்பூரில்  நேற்று நடந்த கிழக்கு ஆசிய மாநாட்டின் இடையே பிரதமர் மோடியும், அமெரிக்க  துணை அதிபர் பென்சும் சந்தித்து பேசினர். அப்போது, இரு தரப்பு பாதுகாப்பு,  வர்த்தக ஒத்துழைப்பு, தீவிரவாதத்தை ஒழிப்பது, இந்தோ - பசிபிக் பிரச்னை  தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தி  தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறுகையில், `சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான  பேச்சுவார்த்தையை மோடியும், பென்சும் நடத்தினர். மும்பை தாக்குதலின் 10ம்  ஆண்டு நினைவு தினம் வரும் 26ம் தேதி அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு தீவிரவாத  ஒழிப்பு குறித்து பேச்சு நடத்தப்பட்டது’’ என்றார். இரு தலைவர்கள் இடையேயான பேச்சுவார்த்தையின் போது மோடி கூறுகையில், ‘‘அமெரிக்க அதிபராக  டிரம்ப் பதவியேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவுக்கான அமெரிக்க  ஏற்றுமதி 50 சதவீதம் அதிகரித்துள்ளது. நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபிஸ் சயீத் உள்ளிட்ட தீவிரவாதிகள் தேர்தலில் பங்கேற்றது கவலை அளிக்கிறது. இது இந்தியா, அமெரிக்கா மட்டும் கவலை கொள்ளத்தக்க செய்தியல்ல. சர்வதேச சமுதாயமே கவலை கொள்ள வேண்டிய சம்பவம். உலக தீவிரவாதம் அனைத்தும் ஒரே இடத்தில் இருந்துதான் தோன்றுகிறது என்று பென்ஸ் நினைவுபடுத்தியதற்கு எனது நன்றி’’ என்றார். அப்போது, ‘உலக நாடுகள் பலவற்றில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்களுக்கு ஒரு குறிப்பிட்ட நாடே காரணம்’ என பாகிஸ்தானை மறைமுகமாக மோடி குற்றம்சாட்டினார்.

மூலக்கதை