விவசாயத்தில் வருமானம் இல்லாததால் செம்மரம் வெட்டும் வேலை செய்தோம்: பிடிபட்ட நபர் உருக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
விவசாயத்தில் வருமானம் இல்லாததால் செம்மரம் வெட்டும் வேலை செய்தோம்: பிடிபட்ட நபர் உருக்கம்

திருமலை: திருப்பதியில் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் வனத்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்திரகிரி மண்டலம், குர்ரப்பகாரிபல்லி வனப்பகுதியில் சென்றபோது அவ்வழியாக சென்ற 10க்கும் மேற்பட்டவர்கள் போலீசார் சுற்றி வளைக்க முயன்றனர்.

அப்போது அவர்கள் தப்பிச்சென்றனர். இதில் ஒருவர் பிடிபட்டார்.

அவர் சேலம் மாவட்டம், கல்வராயன் மலையை சேர்ந்த பழனிவேல் என்பது தெரியவந்தது. தப்பியோடியவர்களை பிடிப்பதற்காக ஐஜி காந்தாராவ் தலைமையில் கூடுதல் படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது.

பிடிபட்ட பழனிவேல் கூறியதாவது: எனக்கு ஊரில் 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் போதிய வருமானம் கிடைக்காததால் குடும்பம் நடத்த சிரமப்பட்டேன்.

இதனால், எங்கள் ஊருக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ரங்கராஜன் என்பவர் உதவியுடன் செம்மரம் வெட்டுவதற்காக கருமந்துறையில் இருந்து புறப்பட்டோம். பெங்களூரில் இருந்து இரவு 8 மணிக்கு கர்நாடக அரசு பஸ்சில் திருப்பதி அருகே வனப்பகுதியில் இறங்கி நடந்து சென்றோம்.



எங்களுடன் எங்கள் ஊரை சுற்றியுள்ள 10 பேர் வந்தனர். வனப்பகுதியில் செம்மரம் வெட்ட 3 நாட்கள் நடந்து செல்ல வேண்டும்.

ஒரு நாள் மரம் வெட்டுவதற்கும் மீண்டும் இரண்டு நாட்கள் என மொத்தம் ஆறு நாட்கள் ஆகிறது.
வீட்டிற்கு செல்வதோடு சேர்த்து மொத்தம் 8 முதல் 10 நாட்கள் ஆகிறது. ஒரு கிலோவிற்கு ₹600 தருவதாக அழைத்து வந்தனர்.

30 முதல் 40 கிலோ ஒவ்வொருவரும் கட்டைகளை எடுத்து வருவதாகவும், இதன் மூலம் ₹15 ஆயிரம் முதல் ₹20 ஆயிரம் வரை கிடைக்கும். வெட்டிய செம்மரங்களை கடப்பா பைபாஸ் சாலையில் வனப்பகுதியை ஒட்டி நின்றிருக்கும் வாகனத்தில் ஏற்றி விட்டு நடந்தோ அல்லது தனித்தனியாக பிரிந்து ரயில் மற்றும் பஸ்களிலோ சொந்த ஊருக்குச் செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை