யாரை விட்டது ஆஃபர் ஆசை..? : முன்பின் தெரியா இணையதளங்களிலும் தனிப்பட்ட தகவல்களை பகிரும் இந்தியர்கள்

தினகரன்  தினகரன்
யாரை விட்டது ஆஃபர் ஆசை..? : முன்பின் தெரியா இணையதளங்களிலும் தனிப்பட்ட தகவல்களை பகிரும் இந்தியர்கள்

டெல்லி: ஆன்லைன் ஷாப்பிங் என்பது தற்போது இணையம் பயன்படுத்தும் அனைவராலும் விரும்பப்படுகிறது. அதுவும் பண்டிகை காலங்களில் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்கள் ஏராளமான சலுகைகளை அள்ளி வீசுகின்றன. இதற்காகவே காத்திருக்கும் பலர் இந்த சீசன்களில் ஆன்லைனில் பொருட்களை வாங்கி குவிக்கின்றனர். இந்நிலையில் இணைய பாதுகாப்பு குறித்து மெக்கஃபே நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ஆய்வு மேற்கொண்டது. இதில் பெரும்பாலான இந்தியர்கள், சலுகைகள் கிடைக்கும் என்ற ஆசையில், முன்பின் தெரியாத இணையதளங்களில் கூட தங்களது தனிப்பட்ட தகவல்களை தாராளமாக பகிரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.125 கோடி மக்கள் தொகையுள்ள நம் நாட்டில் இணைய வர்த்தகம் அதிவேகமாக வளர்ந்து வரும் துறையாக அசூர வளர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில் பண்டிகை சீசன்களின் போது இணைய வர்த்தக நிறுவனங்கள் வழங்கும் அதிரடி தள்ளுபடிகளுக்கு ஆசைப்பட்டு 55% இந்தியர்கள் தங்களது ஈ-மெயில் ஐடி, உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை முன்பின் அறியா இணையதளங்களில் பகிர்ந்து கொள்வதாக ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. அதேபோல், 45% பேர் தங்களது அலைபேசி எண்ணையும் பகிர்வதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.நமது ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாக்ராம் போன்ற சமூக வலைத்தளங்களில் மட்டுமில்லாமல், வங்கிக் கணக்குகளுக்குக் கூட ஈ-மெயில் ஐடியையோ, அலைபேசி எண்ணையோ தான் Login ஐடி-யாக கொடுக்கிறோம். இவற்றை அறிவதன் மூலம், ஒருவரது சமூக வளைத்தளங்கள் முதல் வங்கிக் கணக்கு வரை அனைத்தையும் எளிதாக ஹேக் செய்து தகவல்களையோ, பணத்தையோ வினாடியில் திருடலாம். நம்பத்தகுந்த இணையதளங்களிடமே நமது தனிப்பட்ட தகவல்களை பகிர்வதில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அப்படி இருக்கையில் முன்பின் தெரியாத இணையதளங்களில் ஈ-மெயில் ஐடி, மொபைல் எண் உள்ளிட்டவற்றை பகிர்ந்தால் ஹேக்கர்களின் வலையில் விழுவதற்கு வாய்ப்பு அதிகம் என்பதை மறவாதீர்...

மூலக்கதை