இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: கூச்சல் குழப்பத்தால் சபை ஒத்திவைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி: கூச்சல் குழப்பத்தால் சபை ஒத்திவைப்பு

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கூச்சல், குழப்பம் ஏற்பட்டதால், நாளை வரை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இலங்கையில் ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவியை அதிபர் சிறிசேனா பறித்தார்.

புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை நியமித்தார். இதனால் இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

சட்டத்துக்கு புறம்பாக ராஜபக்சே பிரதமராக பதவியேற்றுள்ளார் என்றும், இதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். அவரது கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தான் தொடர்ந்து பிரதமராக இருப்பதாகவும் கூறினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்களை இழுக்க ராஜபக்சே கோடிக்கணக்கில் பேரம் பேசினார். சில எம்பிக்கள் ஆதரவும் தெரிவித்தனர்.

ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ராஜபக்சேவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. கணிசமான எம்பியை வைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் ராஜபக்சேவை ஆதரிக்கவில்லை.

225 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்றத்தில், போதிய பலம் இல்லாததால், சிறிசேனா-ராஜபக்சே கூட்டணிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து கடந்த 9ம் தேதி  உத்தரவிட்டார்.

ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதிபரின் உத்தரவுக்கு ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அதிபரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், நாடாளுமன்றம் கலைப்பு உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.

மேலும், ஜனவரி 5ம் தேதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டனர். இந்த உத்தரவு அதிபர் சிறிசேனா, ராஜபக்சேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், இன்று காலை 10 மணிக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றத்தில் பிரதமர் ராஜபக்சேவுக்கு எதிராக ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி சார்பில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்றத்துக்கு ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே மற்றும் எம்பிக்கள் வந்திருந்தனர்.

கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்ட நிலையில், ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார்.

இந்நிலையில், ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம், ராஜபக்சே ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது.

அவரது ஆட்சி கவிழ்ந்துள்ளது. இதனால் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் பிரதமராக பதவி ஏற்பாரா? என்பது சிறிசேனாவில் கையில் உள்ளது.

நாடாளுமன்றக் கூட்டத்தில் அமளி ஏற்பட்டதால், கூட்டம் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.

.

மூலக்கதை