இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி

தினகரன்  தினகரன்
இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவிற்கு பெரும்பான்மை இல்லை என நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது நடந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை நிரூபிக்கப்படவில்லை என சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார். கடும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடியது. அப்போது அதிபர் சிறிசேனாவால் புதிதாக பிரதமராக நியமிக்கப்பட்ட ராஜபக்சேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜபக்சே அவையில் இருந்து வெளிநடப்பு செய்தார். இதனையடுத்து நாடாளுமன்றத்தில்  கூச்சல், குழப்பம் நிலவியது. ரணில் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அவையில் பங்கேற்றனர். பின்னர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் ஆதரவை  தெரிவித்தது. மேலும் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அவர்களின் ஆதரவை தெரிவித்து இருந்தனர். இறுதியில் ராஜபக்சேவிற்கு பெரும்பான்மை இல்லை என நாடாளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். இதனையடுத்து பிரதமர் பதவியை ராஜபக்சே இழக்கிறார்.

மூலக்கதை