இளம் வாக்காளர்களே ஓட்டு போட வாங்க...!

தமிழ் முரசு  தமிழ் முரசு
இளம் வாக்காளர்களே ஓட்டு போட வாங்க...!

சட்டீஸ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ெதலங்கானா, மிசோரம் ஆகிய மாநில சட்டசபை தேர்தலையொட்டி, அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்கள்  பட்டியலை வெளியிட்டு, தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சட்டீஸ்கர் மாநிலத்தில் 18 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் முடிந்தது.

மத்திய  பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். அதனால்,  தொகுதி வாரியாக எந்ததெந்த வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறித்து, இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

ராஜஸ்தான்,  தெலங்கானா மாநிலங்களில் வேட்புமனு தாக்கல் துவங்கிய நிலையில், வரும் 19ம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும்.   தொடர்ந்து, வரும் 22ம் தேதி மேற்கண்ட இரண்டு மாநிலங்களிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். சட்டீஸ்கர் மாநிலத்தில் வரும் 20ம் தேதி  இரண்டாம்கட்ட தேர்தல், 72 தொகுதிகளுக்கு நடக்கவுள்ளது.



நக்சலுடன் காங். கூட்டு உ. பி முதல்வர் கடும் தாக்கு

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சட்டீஸ்கர் மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: நக்சல்களை வெட்கமே  இல்லாமல் புரட்சியாளர்கள் என்று உருவகப்படுத்தி வளர்த்தது காங்கிரஸ் கட்சி தான். சட்டீஸ்கரில் நக்சல் இயக்கம் பரவுவதற்குக் காரணம் காங்கிரஸ் தான்.   நக்சல் இயக்கத்தை வளர்ப்பதும், ஊழிலில் திளைப்பதும் தான் காங்கிரஸின் கொள்கை.

எப்போதும் வளர்ச்சித் திட்டங்களைத் தடுப்பது தான் காங்கிரசின் வேலை.   ராமர் கோயில் கட்டுவதிலும் அவர்கள் தான் பெரும் முட்டுக்கடையாக இருக்கின்றனர். வாக்கு வங்கி அரசியலில் மட்டும் தான் காங்கிரஸ் ஈடுபாடு காட்டும்.   தேசிய நலனில் அவர்களுக்கு சுத்தமாக அக்கறையில்லை.



முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி தலைமையில் காங்கிரஸ் சட்டீஸ்கரில் ஆட்சி புரிந்த போது, ஊழல் அதிகமாக இருந்தது. ஏழைகளுக்கும் விவசாயிகளுக்கும்  அவர்கள் எதுவும் செய்யவில்லை.

ஆனால், ரமண் சிங் தலைமையில் பாஜ ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சட்டீஸ்கர் வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்கத்  தொடங்கிவிட்டது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜ ஆட்சியில் தான், சட்டீஸ்கரில் பலருக்கு வீடு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.   சட்டீஸ்கரில் முதற்கட்ட தேர்தல் முடிந்த நிலையில், வரும் 20ம் தேதி நடக்கும் இரண்டாம் கட்ட தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில்  ஈடுபட்டு வருகின்றனர்.

3 அமைச்சர்களுக்கு சீட் மறுப்பு ராஜஸ்தான் பாஜவில் குழப்பம்

முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையில் ராஜஸ்தான் சட்டசபை தேர்தலுக்கான பாஜ கட்சி வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியல்  வெளியிட்டதில் இருந்து, பாஜ கட்சியில் ராஜினாமா படலம் துவங்கிவிட்டது. இந்நிலையில் மூன்று எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகுவதாக  ராஜினாமா கடிதத்ததை கட்சி தலைமையிடம் அளித்துள்ளனர்.

குறிப்பாக, பாஜ கட்சியை சேர்ந்தவரும், ஐந்து முறை எம்எல்ஏவாக இருந்த சுரேந்தர் கோயல்,  ராஜஸ்தான் பாஜ மாநில தலைவர் மதன்லால் சாய்னியிடம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். இதுகுறித்து சுரேந்தர் கோயல் கூறுகையில், ‘‘வரும்  தேர்தலில் ஜெய்தரன் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவேன்’’ என்றார்.

நாகவுர் தொகுதி எம்எல்ஏ ஹபிபுர் ரஹ்மான், பாஜ கட்சியை விட்டு வெளியேறி,  

காங்கிரஸ் கட்சியில் இணைய தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். பாஜ கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் குல்தீப், சட்டசபை தேர்தலில் தான்  புறக்கணிக்கப்பட்டதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன் கட்சியை விட்டு வெளியேறினார்.

சுகாதார அமைச்சர் காளி பூல் சாராப், போக்குவரத்து அமைச்சர்  யுனெஸ் கான் மற்றும் தொழில்துறை அமைச்சர் ராஜ்பால் சிங் ஷெகாவத் ஆகியோரின் பெயர்கள் முதல் வேட்பாளர்கள் பட்டியலில் இல்லை. இதனால்,  இவர்களும் கட்சியை விட்டு விலகலாம் என்று கூறப்படுகிறது.

இதுக்குறித்து பாஜ தலைவர் அவினாஷ் ராய் கன்னா கூறுகையில், ‘‘கட்சியில் ஏற்பட்டுள்ள  வேறுபாடுகள் விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும். முழு வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்ட பிறகு, இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்’’  என்றார்.



அரசாணை வாபஸ் ஏன்?  தெலங்கானாவில் திருப்பம்

 தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்பட 300 பேருக்கு எதிரான விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்வதாக அந்த மாநில அரசு அரசு ஆணை  பிறப்பித்துள்ளது. ஆனால், அதற்கு அடுத்த சில மணி நேரங்களிலேயே தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி அந்த அரசாணையை திரும்பப் பெறுவதாக  அறிவித்தது.

தெலங்கானாவில் டிசம்பர் 7ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில்  உள்ளன.

அதனால், எவ்வித புதிய திட்டங்களை அறிவிக்கவும், அரசாணைகளை வெளியிடவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநில அரசு சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென ஓர் அரசாணையை வெளியிட்டது.



அதாவது ஆந்திரத்தில் இருந்து தெலங்கானாவை தனி மாநிலமாக பிரிக்கக் கோரி கடந்த 2009 - 2012ம் ஆண்டு வரையில் நடைபெற்ற போராட்டத்தின்போது  சந்திரசேகர் ராவ், அவரது மகன் ராமாராவ், மகள் கவிதா உள்ளிட்ட 300 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதுதொடர்பான விசாரணை  நடவடிக்கைகளை ரத்து செய்வதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தச் சூழலில், அதற்கு அடுத்த சில மணி நேரத்தில் அந்த ஆணையை திரும்பப்  பெறவதாக புதிய உத்தரவு ஒன்று வெளியிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், திரும்ப பெறுதல் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.   இதற்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு எதிராக, காங்கிரஸ் - தெலுங்கு தேசம் கூட்டணி அமைத்துள்ளதால்,  தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க புதுபுது யுக்திகளை கையாண்டு வருவதாக கூறப்படுகிறது.

மும்முனை போட்டியால் பீதி மிசோரம் காங்.

தடுமாற்றம்

மிசோரம் மாநிலத்தில், 40 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 28ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் காங்கிரஸ் கட்சியும், மிசோ  தேசிய முன்னணி கட்சிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

அதேநேரம், கடந்த 1972ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது சட்டசபை தேர்தல் முதல் கடந்த 2013ம்  ஆண்டு வரை நடைபெற்ற தேர்தல் வரை, இன்னமும் ஒரு சட்டசபை தொகுதியைக் கூட கைப்பற்றாத பாஜவும், இந்தத் தேர்தலில் வெற்றிப் பெற தீவிரமாகப்  பிரசாரம் செய்து வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் ஆட்சியிலுள்ள பாஜ, மிசோரத்திலும் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டால், காங்கிரஸ் இல்லா  வடகிழக்கு என்ற இலக்கு நிறைவாகிவிடும் என்று கருதுகிறது.

மிஸோ தேசிய முன்னணி கட்சியானது,

பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்  அங்கம் வகித்தாலும், பாஜ கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துவிட்டது. காங்கிரஸ் மற்றும் மிசோ தேசிய முன்னணி கட்சிகள்  ஒன்றையொன்று மாறி மாறிக் குற்றம் சாட்டி வருகின்றன.

கடந்த 2008ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சி, ‘பாஜவும், மிசோ தேசிய  முன்னணியும் மறைமுகமாகக் கூட்டணி வைத்துள்ளன’ என்று வீடு வீடாகத் துண்டுப் பிரசுரங்கள் வினியோகம் செய்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.   ஆனால், முதல்வர் லால் தன்காவ்லா தலைமையிலான காங்கிரஸ் கூட்டணியின் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வரும் மிசோ தேசிய முன்னணி, கடந்தகால  காங்கிரஸ் ஆட்சியின் பழைய ஆவணங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை ஆதாரமாக வைத்து, காங்கிரஸ் கட்சியின் மீது குற்றம் சாட்டி பிரசாரம் செய்து  வருகிறது.

பாஜ முதல்வரின் மச்சானுக்கு ‘சீட்’ ம. பி காங்கிரஸ் கட்சி தாராளம்

மத்திய பிரதேசத்தில் பாஜவைச் சேர்ந்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான ஆட்சி, கடந்த 3 முறையாக ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த சில  வாரங்களுக்கு முன் பாஜவில் இருந்து வெளியேறி, காங்கிரஸ் கட்சியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மைத்துனர் சஞ்சய் சிங் மசானி இணைந்தார்.   அவருக்கு, சட்டசபை தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சி சீட் அளித்துள்ளது.

தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ள மசானி கூறுகையில், ‘‘மத்திய  பிரதேசத்தை காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் போன்ற தலைவர்கள்தான் ஆள வேண்டும். சிவராஜ் சிங் சவுகானுக்கு தகுதியில்லை’’ என்று கூறினார்.



மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 தொகுதிகள் போட்டியிடும் வேட்பாளர்களில் 213 பேரின் பெயர்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. கடந்த சில  நாட்களுக்கு முன், 4வது வேட்பாளர்கள் பட்டிலை காங்கிரஸ் கட்சி வெளியிட்ட, 29 பேர் கொண்ட பெயர் பட்டியலில், முதல்வரின் மைத்துனர் சஞ்சய் சிங் மசானி  பெயரும் இடம் பெற்றிருந்தது.

அவர், வராசியோனி தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மீதம் உள்ள 17 வேட்பாளர்களின் பெயர்களை  காங்கிரஸ் கட்சி விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் மைத்துனர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நிலையில்,  தற்போது அவருக்கு சீட்டும் வழங்கப்பட்டதால், மாநில பாஜ கட்சி முதல்வர் குடும்பத்து மீது கடும் அதிருப்தியில் உள்ளது.

அதேநேரம், மைத்துனர் காங்கிரஸ்  கட்சியில் சேர்ந்ததால், பாஜவின் வெற்றி பாதிக்காது என்று, முதல்வரின் ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

.

மூலக்கதை