சர்காரில் புகைபிடிக்கும் காட்சி : கேரளாவில் விஜய் மீது வழக்கு

தினமலர்  தினமலர்
சர்காரில் புகைபிடிக்கும் காட்சி : கேரளாவில் விஜய் மீது வழக்கு

விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த சர்கார் படம் கடந்த தீபாவளி தினத்தன்று வெளிவந்தது. இந்தப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் புகைபிடிக்கும் காட்சி வெளிவந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டதும், அது மாற்றப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் 10க்கும் மேற்பட்ட காட்சியில் புகை பிடிப்பது இடம்பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சர்கார் படம் கேரளாவில் வெற்றிகரமாக ஓடி பெரும் வசூலைக் கொடுத்துள்ளது. தமிழ்நாட்டுக்கு நிகராக விஜய்க்கு கேரளாவிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் திருச்சூர் மாவட்ட சுதாகாதாரத் துறையினர், திருச்சூர் கோர்ட்டில் சர்கார் படத்தின் புகை பிடிக்கும் காட்சிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

திருச்சூர் மாவட்ட சுகாதாரத்துறை புகை பிடிக்கும் வழக்கத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதற்கு இடையூறு செய்வது போன்று திருச்சூரில் வெளியான சர்கார் படம் அமைந்திருக்கிறது. இது இளைஞர்களை புகைபிடிக்கத் தூண்டுகிறது. எங்கள் பணிக்கு இதன் மூலம் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சர்கார் படத்தை திருச்சூரில் வெளியிட்ட கோட்டயம் சயூஜியம் சினி ரிலீஸ், படத்தை தயாரித்த நிறுவனம், திருச்சூர் ராம்தாஸ் திரையரங்க உரிமையாளர் ஆகியோர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளனர். புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்த விஜய் முதல் குற்றவாளியாகவும், இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் 2வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை