மகளிர் உலக கோப்பை டி20 இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா : ஷப்னிம் இஸ்மாயில் அபார பந்துவீச்சு

தினகரன்  தினகரன்
மகளிர் உலக கோப்பை டி20 இலங்கையை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா : ஷப்னிம் இஸ்மாயில் அபார பந்துவீச்சு

செயின்ட் லூசியா: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில், தென் ஆப்ரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. டேரன் சம்மி தேசிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில், டாசில் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. தொடக்கத்திலேயே விக்கெட் சரிந்ததால் திணறிய இலங்கை அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஷசிகலா வர்தனே அதிகபட்சமாக 21 ரன், நிலாக்‌ஷி டி சில்வா 10 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். சுராங்கிகா 20 ரன், பிரபோதனி (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.தென் ஆப்ரிக்க வேகம் ஷப்னிம் இஸ்மாயில் 4 ஓவரில் 10 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார் (3ம் கிளீன்போல்டு). காப், கிளாஸ், டேனியல்ஸ், நியகெர்க், செகுகுணே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 18.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்து வென்றது. லீ 1, வுல்வார்ட் 4, மரிஸன்னே காப் 38 ரன் (44 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து பெவிலியன் திரும்பினர். கேப்டன் நியகெர்க் 33 ரன், மிக்னான் டு பிரீஸ் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஷப்னிம் இஸ்மாயில் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். தென் ஆப்ரிக்க அணி 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. இங்கிலாந்து அசத்தல்: ஏ பிரிவில் வங்கதேச அணியுடன் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேசம் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 76 ரன்; மழையால் பாதிக்கப்பட்ட இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 16 ஓவரில் 64 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட, அந்த அணி 9.3 ஓவரிலேயே இலக்கை எட்டியது (டி/எல் விதி). இங்கிலாந்து அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தன. ஏ பிரிவில் இங்கிலாந்து (3), வெஸ்ட் இண்டீஸ் (2), தென் ஆப்ரிக்கா (2) முன்னிலை வகிக்கின்றன. பி பிரிவில் ஆஸ்திரேலியா (4), இந்தியா (4) முதல் 2 இடத்தில் உள்ளன.

மூலக்கதை