நியூசிலாந்து சுற்றுப்பயணம் இந்தியா ஏ அணியில் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு

தினகரன்  தினகரன்
நியூசிலாந்து சுற்றுப்பயணம் இந்தியா ஏ அணியில் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு

மும்பை: நியூசிலாந்து ஏ அணியுடன் 4 நாள் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இந்தியா ஏ அணியில் ஆல் ரவுண்டர் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா ஏ அணி 3 டெஸ்ட் (அதிகாரப்பூர்வம்ற்றது, 4 நாள் ஆட்டம்) மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் மவுன்ட் மவுங்காநுயி ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது. இந்தியா ஏ அணியில் இடம் பெற்றிருந்த ரோகித் ஷர்மாவுக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடினமான ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தயாராக, ரோகித் ஷர்மாவுக்கு இந்த போட்டி உதவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஓய்வளித்திருப்பது சரியல்ல என்று முன்னாள் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, டெஸ்ட் போட்டிகளில் அவர் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில் இது தேவையற்ற நடவடிக்கை என அவர்கள் கூறியுள்ளனர். இதுவரை 193 ஒருநாள் போட்டியில் விளையாடி 7454 ரன் குவித்துள்ள ரோகித் (சராசரி 47.78), 25 டெஸ்டில் 1479 ரன் எடுத்துள்ளார் (சராசரி 39.97).அஜிங்க்யா ரகானே தலைமையிலான இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ள பிரித்வி ஷா, முரளி விஜய், ஹனுமா விஹாரி, பார்திவ் பட்டேல் போன்ற வீரர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டிக்கான இந்தியா ஏ: அஜிங்க்யா ரகானே (கேப்டன்), முரளி விஜய், பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், ஹனுமா விஹாரி, பார்திவ் பட்டேல் (விக்கெட் கீப்பர்), கே.கவுதம், ஷாபாஸ் நதீம், முகமது சிராஜ், நவ்தீப் சாய்னி, தீபக் சாஹர், ரஜ்னீஷ் குர்பானி, விஜய் ஷங்கர், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்).

மூலக்கதை