சதம் விளாசினார் பிரெண்டன் டெய்லர் ஜிம்பாப்வே 310 ரன்னில் ஆல் அவுட் : தைஜுல் 5 விக்கெட் வீழ்த்தினார்

தினகரன்  தினகரன்
சதம் விளாசினார் பிரெண்டன் டெய்லர் ஜிம்பாப்வே 310 ரன்னில் ஆல் அவுட் : தைஜுல் 5 விக்கெட் வீழ்த்தினார்

தாக்கா: வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 310 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கடுமையாகப் போராடிய பிரெண்டன் டெய்லர் சதம் அடித்தார்.மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 522 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. மோமினுல் - முஷ்பிகுர் இணை 4வது விக்கெட்டுக்கு 266 ரன் சேர்த்தது. மோமினுல் 161 ரன், முஷ்பிகுர் 219* ரன், மிராஸ் 68* ரன் விளாசினர். ஜிம்பாப்வே பந்துவீச்சில் ஜார்விஸ் 5 விக்கெட் வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 25 ரன் எடுத்திருந்தது. பிரையன் சாரி 10, டிரிபானோ (0) இருவரும் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். டிரிபானோ 8 ரன்னில் வெளியேற, சாரி 53 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு முனையில் பிரெண்டன் டெய்லர் பொறுப்புடன் விளையாட, வில்லியம்ஸ் 11 ரன், சிக்கந்தர் ரஸா (0) அடுத்தடுத்து வெளியேறினர். ஜிம்பாப்வே அணி 131 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், டெய்லர் - பீட்டர் மூர் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 139 ரன் சேர்த்தது. மூர் 83 ரன் (114 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), பிரெண்டன் டெய்லர் 110 ரன் (194 பந்து, 10 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். டெய்லருக்கு இது 5வது டெஸ்ட் சதமாகும். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். சதாரா காயம் காரணமாக பேட் செய்யவில்லை. ஜிம்பாப்வே அணி 105.3 ஓவரில் 304 ரன் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஜார்விஸ் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். வங்கதேச பந்துவீச்சில் தைஜுல் இஸ்லாம் 40.3 ஓவரில் 10 மெய்டன் உட்பட 107 ரன் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றினார். மெகதி ஹசன் மிராஸ் 3, ஆரிபுல் ஹக் 1 விக்கெட் வீழ்த்தினர். ஜிம்பாப்வே அணி இன்னும் 218 ரன் பின்தங்கியுள்ள நிலையில், வங்கதேச அணி பாலோ ஆன் கொடுக்குமா அல்லது 2வது இன்னிங்சை தொடங்கி விளையாடுமா என்ற சுவாரசியமான எதிர்பார்ப்புடன் இன்று 4ம் நாள் ஆட்டம் தொடங்குகிறது.

மூலக்கதை