இலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடி நாடாளுமன்ற கலைப்புக்கு தடை பொது தேர்தலை நிறுத்தவும் உத்தரவு: இன்று அவசரமாக கூடுகிறது பார்லிமென்ட்

தினகரன்  தினகரன்
இலங்கை உச்ச நீதிமன்றம் அதிரடி நாடாளுமன்ற கலைப்புக்கு தடை பொது தேர்தலை நிறுத்தவும் உத்தரவு: இன்று அவசரமாக கூடுகிறது பார்லிமென்ட்

கொழும்பு: இலங்கை, நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதையடுத்து நாடாளுமன்றம் இன்று அவசரமாக கூடுகிறது.  இலங்கையில் ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவியை பறித்த அதிபர் சிறிசேனா, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேவை நியமித்தார். இதனால்  அரசியல் குழப்பம் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் சிறிசேனா - ராஜபக்சே கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து. அதிபர் சிறிசேனா நாடாளுமன்றத்தை கலைத்து கடந்த 9ம் தேதி  உத்தரவிட்டார். ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.அதிபரின் உத்தரவுக்கு ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதிபரின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி தேர்தல் கமிஷன் உறுப்பினர் ரத்னஜீவன் ஹோலி உட்பட  முக்கிய எதிர்க்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் தலைமை நீதிபதி நலின் பெரேரா தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் ஆஜராக எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பலத்த பாதுகாப்புடன்  நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். அரசு தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஜெயந்தா ஜெயசூர்யா ஆஜராகி, ‘‘அரசியல் சாசனப்படி, நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் அதிபருக்கு உண்டு. எனவே மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார்.இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், நாடாளுமன்றத்தை கலைத்த சிறிசேனாவின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் ஜனவரி 5ம் தேதி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டனர்.  இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் என்று சபா நாயகர் ஜெயசூர்யா அறிவித் துள்ளார். இதற்காக எம்.பி.க்களுக்கு அவசர செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

மூலக்கதை