குடிசை மாற்று வாரியம் கட்டத் துவங்கியது...ரூ.27 கோடியில் 320 வீடு!நீர்நிலை ஆக்கிரமிப்பை முற்றிலும் அகற்றணும்!

தினமலர்  தினமலர்
குடிசை மாற்று வாரியம் கட்டத் துவங்கியது...ரூ.27 கோடியில் 320 வீடு!நீர்நிலை ஆக்கிரமிப்பை முற்றிலும் அகற்றணும்!

உடுமலை:உடுமலையில், நீர்நிலையை ஆக்கிரமித்து குடியிருந்த, 320 குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டு, நீர்நிலைகள் மீட்கப்பட்டன. தற்போது, 320 குடும்பத்தாருக்கு, குடிசை மாற்று வாரியம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி துவங்கியுள்ளது.
உடுமலையிலுள்ள ஏழு குளங்களின் உபரிநீர் மற்றும் மழை காலங்களில் உருவாகும் சிறு ஓடைகள் இணைந்து, நகர பகுதியில் தங்கம்மாள் ஓடையாக ஓடி வருகிறது.ஓடையை ஆக்கிரமித்து, நுாற்றுக்கணக்கான வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இதனால், மழைக்காலங்களில் வெள்ளநீர் வடிய வழியில்லாமல், கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டன.ஓடையில் வசித்து வந்தவர்களுக்கு, மாற்று குடியிருப்பு வசதிக்காக, புக்குளத்தில், குடிசை மாற்று வாரியம் சார்பில், 27 கோடி ரூபாய் செலவில், அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன.தரை தளத்துடன் மூன்று மாடிகளுடன், பிளாக்கிற்கு 32 வீடுகள் வீதம், 10 பிளாக்குகளில், 320 வீடுகள் கட்டப்படுகிறது. படுக்கை அறை, சமையல் அறை, கழிவறை மற்றும் பால்கனியுடன், ஒவ்வொரு வீடுகளும், 400 சதுர அடி பரப்பளவில் அமைகிறது.
மேலும், குடிநீர், ரோடு, மின் விளக்கு வசதிகளும், பூங்கா வசதியும் செய்யப்படுகிறது. ஒவ்வொரு வீடும், 8.5 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. இதில், பயனாளிகள் பங்களிப்பு தொகையாக, 10 சதவீதம் செலுத்த வேண்டும்; இதற்கான பயனாளிகள் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டு, டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.கடந்த, ஜூன் மாதம் பணிகள் துவங்கி, தற்போது எட்டு பிளாக் பணிகள் நடந்து வருகிறது; வரும், 2019 ஜூலைக்குள் பணி முடிந்து, பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கப்பட உள்ளது.குடிசை மாற்றும வாரிய அதிகாரிகள் கூறுகையில்,'மத்திய, மாநில அரசு நிதி மூலம், 320 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி நடந்து வருகிறது. எட்டு மாதத்தில் பணிகள் நிறைவு செய்யப்படும். டோக்கன் வழங்கியுள்ள பயனாளிகளுக்கு குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்படும்,' என்றனர்.இன்னும் இருக்கு...உடுமலை நகரில், ஓடைகளை ஆக்கிரமித்து, நாராயணன் காலனி, சிங்கப்பூர் நகர், எம்.ஜி.ஆர்., நகர், யு.எஸ்.எஸ்., காலனி, யு.கே.பி., நகர், நெடுஞ்செழியன் காலனி, கருணாநிதி காலனி என, 30 கி.மீ., துாரம் நீர் நிலைகளை ஆக்கிரமித்தும், மறித்தும் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.
இம்மக்களும், அடிப்படை வசதிகள் இல்லாமல், சாக்கடை கழிவு, குப்பைகளுக்கு மத்தியில் சுகாதாரமற்ற சூழலில் வசித்து வருகின்றனர்.எனவே, உடுமலையிலுள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றவும், அவர்களுக்கு மாற்று குடியிருப்பு வசதிகள் செய்து தர, மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, நகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் முன் வர வேண்டும்.

மூலக்கதை