கஜா புயல் திசை மாறியதால் 6 மாவட்டங்களில் மட்டும் கனமழை எச்சரிக்கை!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கஜா புயல் திசை மாறியதால் 6 மாவட்டங்களில் மட்டும் கனமழை எச்சரிக்கை!

கஜா புயலின் திசை மாறியது. கடலூர்-பாம்பன் இடையே, 15 ந் தேதிகரையைக் கடக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 10ம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘’கஜா’’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த புயலானது, சென்னைக்கு வடகிழக்கே 840 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது. தற்போது நாகப்பட்டினத்திற்கு வட கிழக்கே 820 கிலோ மீட்டர் தொலையில் நிலைகொண்டுள்ளது. 

இந்த புயல் 15ம் தேதி முற்பகலில் கடலூர் - பாம்பன் இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், கனமழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழை பெய்யக்கூடும். 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் மழை பெய்யக்கூடும். புயல் பாதிப்பு இல்லை. இயல்பான அளவில் காற்று வீசக்கூடும். வங்கக்கடலில் உருவாகியுள்ள `கஜா’ புயல் தொடர்பாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் எடுக்கப்பட உள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். 

மூலக்கதை