பா.ஜ.க. எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

PARIS TAMIL  PARIS TAMIL
பா.ஜ.க. எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் பற்றி ரஜினிகாந்துக்கு ஒன்றுமே தெரியாது என்று அப்படியொரு மாயையை சிலர் உருவாக்கியிருக்கிறார்கள்.

எனக்கு தெரியும் என்றால் தெரியும் என்று சொல்வேன். தெரியாது என்றால் தெரியாது என்று சொல்வேன். அதில் வெட்கப்பட ஒன்றுமே கிடையாது.

அன்றைக்கு கேட்ட கேள்வி கொஞ்சம் தெளிவாக இல்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேரை விடுதலை செய்வதற்காக தமிழக அரசு கொடுத்த கடிதம் என்று சொல்லியிருந்தால், எனக்கு புரிந்திருக்கும். எடுத்த எடுப்பிலேயே 7 பேரை விடுதலைக்காக என்று சொன்னால், எந்த 7 பேர் என்று கேட்பது இயற்கை தானே. அதற்காக, அந்த 7 பேர் பற்றி தெரியாத முட்டாள் இல்ல இந்த ரஜினிகாந்த்.

பேரறிவாளன் பரோலில் வந்து வெளியே இருந்தபோது, அவரிடம் போனில் 10 நிமிடத்துக்கு மேல் பேசி அவருக்கு ஆறுதல் சொன்னவன் இந்த ரஜினிகாந்த். இந்த வழக்கு பல இடங்களில், பல கட்டங்களில், சுப்ரீம் கோர்ட்டு, ஜனாதிபதி என பல்வேறு நிலைகளுக்கு போய் வந்து கொண்டிருக்கிறது.

இப்போது தமிழக அரசு, அந்த மனுவை அனுப்பி, அது இப்போது கவர்னர் இடம் இருக்கிறது. கவர்னர் அதுபற்றி முடிவு எடுக்க வேண்டும். 27 ஆண்டுகள் அவர்கள் தண்டனையை அனுபவித்துவிட்டார்கள். போதும், மனிதாபிமானமாய் அவர்களை விடுதலை செய்வது நல்லது. இது என்னுடைய கருத்து.

மற்றொன்று, பா.ஜ.க. பற்றி என்னிடம் கேட்டார்கள். எல்லா கட்சிகளும் பா.ஜ.க.வை தோற்கடிக்க ஒன்றாக சேர்ந்து கொண்டிருக்கிறார்களே, அது ஆபத்தான கட்சியா? என்று கேட்டார்கள்.

என்னுடைய பதில் எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போது, பா.ஜ.க. அவர்களுக்கு ஆபத்தான கட்சி தானே. பா.ஜ.க. எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி தானே. அது ஆபத்தான கட்சியாக இருக்கிறதா?, இல்லையா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

நான் ஊடகங்களை எல்லாம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் கேமராவில் எல்லாம் பதிவாகும். திரித்து வெளியிட்டால் அது தெரிந்துவிடும். அது நல்லா இருக்காது. நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு ரஜினிகாந்த் அளித்த பதில்களும் வருமாறு:-

அரசியலில் முழுவதும் இறங்கவில்லை

கேள்வி:- உங்கள் கருத்து தவறாக புரியப்பட்டது என்று நினைக்கிறீர்களா?.

பதில்:- ஆமாம். நீங்கள்தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே.

கேள்வி:- நேற்று கேள்வி கேட்கும்போது பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்று கேள்வி கேட்டார்கள். நீங்கள் சொல்லியிருந்த பதிலில் அவர்கள் நினைத்தால் அப்படியாக இருக்கலாம் என்று சொல்லியிருந்தீர்கள். அந்தக் கேள்விக்கான பதிலாகத்தானே அதை எடுத்துக்கொள்ள முடியும்?. இப்போது அதே கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?.

பதில்:- இப்போதுகூட அதைத்தானே சொன்னேன். எதிர்க்கட்சிகள் அந்த கட்சியை (பா.ஜ.க.) ஆபத்தான கட்சியாக நினைத்தால், அவர்களுக்கு அது ஆபத்தான கட்சி தான். மக்களுக்கு அது ஆபத்தா?, இல்லையா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். சரியா?. புரிந்ததா இப்போது?.

கேள்வி:- பா.ஜ.க. ஆபத்தான கட்சியா?, இல்லையா? என்பது பற்றி ரஜினிகாந்துடைய கருத்து என்ன?.

பதில்:- அதுபற்றி நான் இப்போது சொல்ல முடியாது. மக்கள் தான் முடிவு பண்ண வேண்டும். என் கருத்தை இப்போது சொல்ல முடியாது. நான் இன்னும் முழுவதுமாக அரசியலில் இறங்கவில்லை. நான் மறுபடியும்.. மறுபடியும் சொல்கிறேன். எத்தனை தடவை சொல்வது என்று தெரியவில்லை.

யார் பலசாலி?

கேள்வி:- கட்சி தொடங்குவதற்கான ஆரம்பகட்ட வேலையை தொடங்கிவிட்டீர்களா?.

பதில்:- அது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. நான் இதை ஏற்கனவே பலமுறை சொல்லியிருக்கிறேன். அன்றாடம் நடைபெறும் கூட்டங்கள் பற்றி நான் வெளியே சொல்லிக் கொண்டிருக்க மாட்டேன். நீங்கள் தப்பாக நினைக்க வேண்டாம். முழுவதுமாக நான் அரசியலில் இறங்கும்போது தெளிவாக சொல்கிறேன் என்று கூறியிருக்கிறேன்.

கேள்வி:- அரசியல் பயணத்தை நீங்கள் எப்போது தொடங்குவீர்கள்?.

பதில்:- நீங்கள் இதே கேள்வியை கேட்டு, நான் இதே பதிலை சொன்னால், மக்கள் கடுப்பாகி விடுவார்கள். மக்களுக்கு தொந்தரவு ஆகிவிடும்.

கேள்வி:- பா.ஜ.க.வை பற்றி நீங்கள் சொல்ல வேண்டாம். ஆனால், பெரிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர்வது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?.

பதில்:- 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்து போராடுகிறார்கள் என்றால், யார் பலசாலி?. அந்த 10 பேரா?, அந்த 10 பேர் எதிர்த்து போராடுகிறார்கள் அல்லவா ஒருத்தரை, அவர் பலசாலியா?. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

யாருடன் கூட்டணி?

கேள்வி:- அப்படி என்றால், பா.ஜ.க. பலசாலியாக இருப்பதாக நாங்கள் எடுத்துக்கொள்ளலாமா?.

பதில்:- நீங்களே புரிந்து கொள்ளுங்கள். ஒருவர் மேல் 10 பேர் யுத்தத்துக்கு போனால், யார் பலசாலி?. 10 பேரா?, அந்த ஒருத்தரா?. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

கேள்வி:- அப்படி என்றால், பா.ஜ.க.வோடு நீங்கள் கூட்டணி வைத்துக்கொள்வீர்களா?.

பதில்:- அதை அப்போது (தேர்தல் வரும்போது) பார்த்துக்கொள்வோம்.

கேள்வி:- அப்படி என்றால், நீங்கள் நரேந்திரமோடியை பலசாலி என்று சொல்ல வருகிறீர்கள்?.

பதில்:- இதைவிட தெளிவாக நான் எப்படி சொல்ல முடியும். இதைவிட தெளிவாக யாரும் சொல்ல முடியாது. 10 பேர் ஒன்று சேர்ந்து ஒருவரை எதிர்க்கிறார்கள் என்றால், யார் பலசாலி?. 10 பேரா?, அந்த ஒருத்தரா?.

கேள்வி:- அந்த 10 பேரைக்கூட பலசாலியாக எடுத்துக்கொள்ளலாம் இல்லையா?.

பதில்:- (சிரிக்கிறார்) 10 பேர் பலசாலி என்றால், அவர்கள் ஒரு பலசாலியை எதிர்க்கிறார்கள் என்றால், அந்த ஒருத்தர் எவ்வளவு பெரிய பலசாலி?.

கேள்வி:- அப்படி என்றால், நரேந்திரமோடி மிகப்பெரிய பலசாலியா?.

பதில்:- (மீண்டும் சிரிக்கிறார்) தேர்தலில் தெரிந்துவிடும்.

குளிர்விட்டு போச்சா?

கேள்வி:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடிகர்களுக்கு எல்லாம் குளிர்விட்டு போய்விட்டது என்று அமைச்சர் ஒருவர் சொல்கிறாரே?.

பதில்:- அவர் (அமைச்சர்) ஒரு நல்ல பதவியில் இருக்கிறார். அவர் கொஞ்சம் பேசும்போது யார் மனதும் புண்படாத வகையில் கருத்துகள் சொன்னால் நல்லது. இப்போது, அதே கேள்வியை நான் கேட்டால் நன்றாக இருக்குமா?. நல்லா இருக்காது இல்லையா?. எனவே, இருக்கும் பதவிக்கு மரியாதை கொடுத்து, கொஞ்சம் பார்த்து பேசினால் சரியாக இருக்கும் என்பது என்னுடைய அபிப்ராயம்.

சர்கார்

கேள்வி:- சர்கார் பட விவகாரத்தில் நீங்கள் மறு தணிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தீர்கள். ஆனால், அதையும் மீறி மறு தணிக்கை செய்யப்பட்டு, சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுக்கு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களே தியேட்டருக்கு முன்பாக வந்து போராட்டம் நடத்தினார்கள். பேனரை எல்லாம் கிழித்தார்கள். இந்த விவகாரத்தில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?.

பதில்:- நான் கடுமையாக கண்டிக்கிறேன். வன்முறை எந்த ரூபத்தில் இருந்தாலும், நான் அதைக் கண்டிக்கிறேன். எல்லா பிரச்சினைக்கும் முதலில் பேச்சுவார்த்தை. மாற்று கருத்து இருந்தால் பேச வேண்டும். எடுத்த எடுப்பிலேயே நீங்கள் தியேட்டரை உடைப்பது, பேனரை கிழிப்பது, படத்தை நிறுத்துவது சரியில்லை. பேச்சுவார்த்தைக்கு பிறகு அப்படி செய்யலாம்.

இலவசங்கள் தேவை

கேள்வி:- சர்கார் படத்தில், இலவசங்கள் கொடுப்பது தான் மிகப்பெரிய பிரச்சினையாக உருவானது.

பதில்:- இலவசங்கள் 100 சதவீதம் தேவை. அது யாருக்கு, என்ன, எதற்கு கொடுக்கிறோம் என்பதுதான் முக்கியம். ஓட்டுக்காக மட்டும், அதை மட்டும் மனதில் வைத்து கொடுத்தால், அது சரியல்ல.

கேள்வி:- கமல்ஹாசன், இலவச மிக்சி, கிரைண்டர் கொடுப்பது தொடர்பாக கருத்து தெரிவித்திருக்கிறார். அதை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?.

பதில்:- அது அவருடைய கருத்து. நான் அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை.

கேள்வி:- நீங்கள் யார் பலசாலி என்று சொன்னீர்கள். அது பலசாலியா?, ஆபத்தானதா?.

பதில்:- (சிரித்துக்கொண்டே அருகில் உள்ள நிருபரை அதற்கு பதிலளிக்க சொல்கிறார்)

இவர் ஏன் கேள்வி கேட்கிறார்?

கேள்வி:- அ.தி.மு.க.வினர் பேனர்களை கிழித்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் என்ன சொல்கிறார் என்றால், ஒரு தலைவரை பற்றி தவறாக சொன்னால் இப்படித்தான் நடப்பார்கள் என்றும், சினிமாவில் நடிப்பவர்கள் நிறைய பணம் சம்பாதிக்கிறீர்கள். மக்களுக்கு எதுவும் செய்வது கிடையாது. நீங்கள் விலையுயர்ந்த காரில் சென்று கொண்டிருக்கிறீர்கள் என்றெல்லாம் அவர் கேட்டிருக்கிறார். அது பற்றி உங்கள் கருத்து என்ன?.

பதில்:- சினிமாக்காரர்கள் எது சொல்ல வேண்டும்?, எது சொல்லக்கூடாது? என்று ஒரு அளவு இருக்கிறது. தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாது. உணர்ச்சிப்பூர்வமான விஷயங்களை நாம் தொடக்கூடாது. நடிகர்கள் பணம் அதிகம் சம்பாதிக்கிறார்கள். அதற்கு வருமான வரி கட்டுகிறார்கள். அவர்களே (வருமான வரித்துறையினர்) கேள்வி கேட்கவில்லை. அதைப்பற்றி இவர் ஏன் கேள்வி கேட்கிறார்.

கேள்வி:- 2.0 படத்துக்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. வாட்டாள் நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

பதில்:- அதை கர்நாடக அரசாங்கம் பார்த்துக்கொள்ளும். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

மூலக்கதை